திருபுவனை அருகே கூட்டுறவு நூற்பாலையில் ₹10 லட்சம் மோட்டார்கள் திருட்டு-தொழிலாளர் சாலை மறியல் - பரபரப்பு

திருபுவனை :  திருபுவனை அருகே உள்ள கூட்டுறவு நூற்பாலையில் 350 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை எலெக்ட்ரீஷியன் முனுசாமி வழக்கம்போல் ஆலைக்கு வேலைக்கு சென்றார். தொடர்ந்து, அவர் மின் மோட்டார் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த 40 மோட்டார்கள் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதுகுறித்து உற்பத்தி மேலாளர் பன்னீரிடம் முனுசாமி தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர் ஆலையில் திருட்டு நடந்திருப்பதாக திருபுவனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மோட்டார் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துவிட்டு அவ்வழியாக உள்ளே வந்து மோட்டார்களை திருடி சென்றுள்ளது தெரியவந்தது. ஆனால், இதுவரை ஆலை நிர்வாகம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக எந்தபுகாரும் அளிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் நேற்று மாலை புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது தொழிலாளர்கள், கூட்டுறவு நூற்பாலையை தொடர்ந்து இயக்க வேண்டும். ஆனால், ஆலை நிர்வாகம் தொழிலாளருக்கு மாதத்தில் 15 நாட்கள் லே-ஆப் கொடுத்துவிட்டு, மீதி 15 நாள் மட்டும் ஆலையை இயக்குகிறது. இதனால் அடிக்கடி திருட்டு நடக்கிறது. மேலும், குறிப்பிட்ட அறையில் மட்டுமே தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக ஆலை நிர்வாகம் போலீசில் இதுவரை புகார் அளிக்காமல் உள்ளது.

இதனால் நிர்வாகத்தின் உடந்தையோடு திருட்டு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. திருட்டில் ஈடுபட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.

 இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: