தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட இன்று முதல் வேட்பு மனு தாக்கல்

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர் அல்லது அவருடைய பெயரை முன்மொழிபவர்களில் எவரேனும் ஒருவர், முனைவர் கி. சீனிவாசன்,

தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலகம் அவர்களிடம் அல்லது கே.ரமேஷ், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் துணைச் செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலகம் அவர்களிடம், சென்னை-600 009, சட்டமன்றப் பேரவைச் செயலகத்திலுள்ள அலுவலகத்தில் எந்நாளிலும், (முறையே வங்கி விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களான 28.05.2022 மற்றும் 29.05.2022 நீங்கலாக) முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிக்குள்ளாக 31.05.2022-ஆம் நாளுக்கு மேற்படாதவாறு வேட்பு மனுக்களை அளிக்கலாம்.

மேலே குறிப்பிடப்பெற்றுள்ள நேரம் மற்றும் இடத்தில், வேட்பு மனு படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். வேட்பு மனுக்கள், சென்னை-600 009, சட்டமன்றப் பேரவைச் செயலக செயலாளர் அலுவலகத்தில் 01.06.2022-ஆம் நாளன்று முற்பகல் 11.00 மணியளவில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பாளர் விலகலுக்கான அறிவிப்பை, வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர் அல்லது வேட்பாளரால் எழுத்து மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அவரது தேர்தல் முகவர்,

மேலே பத்தி 2-இல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகள் எவரிடத்திலேனும் அவரது அலுவலகத்தில் 03.06.2022-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்குள் அளிக்கலாம். தேர்தலில் போட்டி இருப்பின், 10.06.2022-ஆம் நாளன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில், சென்னை-600 009, தலைமைச் செயலகப் பிரதானக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள சட்டமன்றப் பேரவை குழுக்கள் கூடும் அறையில் வாக்குப் பதிவு நடைபெறும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: