'பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் ஒன்றிய அரசு அரசியல் நாடகம்': தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு..!!

சென்னை: பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகளில் பகிர்ந்தளிக்கும் கலால் வரியை குறைத்துவிட்டு பகிர்ந்தளிக்காமல் நேரடியாக எடுத்துக்கொள்ளும் செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட வரிகளை குறைக்காத ஒன்றிய அரசு, வாட் வரியை குறைக்கும்படி மாநில அரசுகளை வலியுறுத்துவது ஏன்? என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வே தொடர்கதையான நிலையில், கடந்த 20ம் தேதி திடீரென்று ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்பு நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்தது.

இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் வரி குறைப்பு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையும், அதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பும் ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகம் என்று தெரிவித்திருக்கிறார். பகிர்ந்தளிக்காத செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட வரிகளை லிட்டருக்கு 31 ரூபாய் அளவுக்கு உயர்த்திவிட்டு கடந்த நவம்பரில் 5 ரூபாயும், தற்போது 8 ரூபாயும் குறைத்துள்ளதாக பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

ஆனால் பகிர்ந்தளிக்கும் வரியை லிட்டருக்கு 9 ரூபாய் 40 காசில் இருந்து, 1 ரூபாய் 40 காசாக குறைத்துவிட்டு மீண்டும் ஒன்றிய அரசு குறைக்க சொல்வது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல் விலையை பல மடங்கு உயர்த்தும் போது மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல், குறைக்கும் போது மட்டும் மாநில அரசுகளை குறைக்க வலியுறுத்தி ஒன்றிய அரசு நெருக்கடி தருவதாக பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

நிதி ஆதாரத்துக்காக மாநில அரசுகள் கையேந்தி நிற்க வேண்டும் என்ற நிலையை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளதாக பழனிவேல் தியாகராஜன் புகார் கூறியுள்ளார். ஆனால் சிறந்த நிதி மேலாண்மை காரணமாக தமிழ்நாடு அரசு அந்த நிலைக்கு செல்லவில்லை என்றாலும் பல மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் நிதிக்காக டெல்லியில் காத்திருக்கும் நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார். இது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது என்று பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: