×

ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது

அழகுப் பெட்டகம் 5

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அகமும் புறமும் சார்ந்ததே ஆரோக்கியத்தின் வளர்ச்சி.. அதேபோல், பார்த்ததும் நமது பார்வைகளில் படும் கூந்தலின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு எந்தெந்த இயற்கைப் பொருட்களைக் கொண்டு சிறப்புச் சேர்க்கலாம் என்பதைக் கடந்த மூன்று வாரங்களாகப் பார்த்து வருகிறோம். இனி எந்த வகையான உணவுகளை உட்கொள்வதன் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டலாம் என்பதையும் இங்கே விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா.

கறிவேப்பிலை

முடியின் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகமிகச் சிறந்த உணவு. இதன் முக்கியத்துவத்தை உணராத பலர் உணவில் இருக்கும் கறிவேப்பிலையினை அசால்டாகத் தூக்கி எறிவார்கள். கறிவேப்பிலை உணவில் வாசனை தருவதைத் தாண்டி, ஆரோக்கியத்தை வலுவாக்கும் அருமருந்து. கறிவேப்பிலையை அப்படியே உண்ண பிடிக்காதவர்கள், பொடி, சட்டினி அல்லது தொக்கு செய்து உணவில் கலந்து உண்ணலாம். காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டு கொப்பு கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து, மென்று உண்டால் கார் மேகக் கூந்தல் வளரக் கட்டாய கேரண்டி. கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொண்டால், முடிகள் விரைவில் வெள்ளையாவதிலிருந்து தப்பிக்கலாம். கொத்தமல்லி தழையையும் பச்சையாக உணவில் சேர்த்தால் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

நெல்லிக்காய்

முடிக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்ல வளர்ச்சியும், கருமை நிறத்தையும் சேர்த்தே தரவல்லது. நெல்லிக் காயினை திட உணவாகவோ, காய வைத்து பொடியாகவோ அல்லது அரைத்து பானமாகவோ உண்ணலாம்.

பனங்கிழங்கு

நார்ச் சத்து மிக்க ஆரோக்கியமான உணவு. பனம் பழம், பனங்கிழங்கு இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது. பனங்கிழங்கை வேகவைத்து, சிறு சிறு துண்டாக்கி வெயிலில் நன்றாகக் காய வைத்து, பொடியாக்கி தினமும் காலை ஒரு ஸ்பூன் உண்டுவந்தால் முடி வளர்ச்சியினை இயல்பாய்த் தூண்டும்.

கீரை வகைகள்

அனைத்துக் கீரையுமே ஆரோக்கியம் சார்ந்தவையே. வாரத்தில் நான்கு நாட்களாவது கீரைகளைத் தவிர்க்காமல் உணவோடு எடுக்க வேண்டும். ஏதாவது ஒரு கீரையினை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம் கிடைக்கப்பெறும் சத்து, முடி வளர்ச்சிக்கும் சிறப்பானதாக அமையும். ராஜகீரை எனப்படும் முருங்கைக்கீரையில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கீரை மட்டுமின்றி முருங்கை மரத்தின் காய், பூ, அதன் குச்சி என அனைத்திலுமே ஆரோக்கியம் உள்ளது. எனவே இந்தக் கீரையினை அடிக்கடி உணவாக எடுப்பது முடி வளர்ச்சிக்கு நல்லது.

காய்கறிகள், பழங்கள்

இருப்புச் சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்துகள் நிறைந்த  காய்கறி மற்றும் சத்து நிறைந்த பழங்களை தினமும் தவறாமல் உணவில் மாற்றி மாற்றி எடுக்க வேண்டும். அசைவ உணவில் மீன் தவிர மற்றவற்றைத் தவிர்த்தால் முடி கொட்டுதல் மற்றும் ஆரோக்கியமற்ற முடி வளர்ச்சியில் இருந்து தப்பிக்கலாம்.

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு

குழந்தைக்கு, பிறக்கும்போது இருந்த முடியினை நீக்கி, கட்டாயமாக மொட்டை போட வேண்டும். குழந்தை பிறந்ததுமே செவிலியர் குழந்தையைக் குளிப்பாட்டி சுத்தம் செய்துதான் உறவினர்களின் கைகளில் ஒப்படைப்பார்கள். ஆனால் தாயின் கருவறையில் பத்து மாதம் இருந்ததன் விளைவாய், சின்ன சின்ன ரத்த துணுக்குகள் மற்றும் அழுக்குகள் நம் கண்களுக்குப் புலப்படாமலே குழந்தையின் தலைமுடிகளுக்கு இடையே உள்ள மயிர்க்கால்களில் படிந்திருக்கும். குழந்தையின் முடி வளர வளர முடிக்கால்களுக்கு இடையில் படிந்த கசடும் அழுக்கும் குழந்தையின் தலையில் பரவத் தொடங்கும். அதனால் குழந்தைக்கு கண்டிப்பாக மொட்டை போடுவது, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு நல்லது.

பத்து வயதுக்குளாக குழந்தைகளுக்கு, மூன்று அல்லது நான்கு முறை முடியினை முழுமையாக நீக்கி மொட்டைபோட்டு மீண்டும் முடியினை வளர்க்க வேண்டும். பெரியவர்களின் தலையில் அரிப்பு, புண், பொடுகு போன்றவை தோன்றினால், முடியினை முழுவதும் நீக்கியபிறகு முறையான மருத்துவ வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். சிலரின் முடி வளர்ச்சி அவர்களின் பரம்பரை(Genetic) தொடர்பானது. பார்க்க சிலர் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் முடி அவர்களுக்கு கருகருவென அடர்த்தியாய் நீளமாய் இருக்கும். சிலர் நல்ல தேக ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். ஆனால் கூந்தல் மெல்லிசாய் அடர்த்தியின்றி காணப்படும். இவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் கூந்தலின் ஆரோக்கியத்தைத்தான் மேம்படுத்த முடியுமே தவிர, விளம்பரங்களில் காட்டுவதைப் போன்று நீண்ட கூந்தலாய் மாற்றிக் காட்டுவதென்பது சுத்த ஏமாற்று வேலை.

உடம்பில் உயிர் இருக்கும் வரை ரத்த ஓட்டம் என்பது மிகவும் முக்கியமானது. நமது உடலில் உள்ள செல்கள், புதிதாக உருவாகும் தன்மையும், பழைய செல்கள் இறக்கும் தன்மையும் கொண்டது. உடலை அழுத்தித் தேய்த்து மசாஜ் கொடுப்பதன் மூலமே பழைய செல்களை வெளியேற்றி, புது செல்களை உயிர்ப்பூட்டி ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். நமது தலையிலும் இதுபோன்ற இறந்த செல்கள் இருக்கும். மயிர்க் கால்களுக்கு இடையே தலையில் அழுத்தம் கொடுப்பதன் வழியாகவே ரத்த ஓட்டத்தை சீராக்கி புதிய செல்களை உருவாக்கி முடி வளர்ச்சியை தூண்ட முடியும். நமது அம்மாக்கள் வீட்டில் தயாரித்து தரும் இயற்கை மூலிகை சீயக்காயினைப் பயன்படுத்தி தலை முடியில் விரல்களால் அழுத்தம் கொடுத்து தேய்த்து, அழுக்கை வெளியேற்றும் முறை இயல்பாக தானாகவே மசாஜாக மாறி ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

* முடி ஏன் கொட்டுகிறது?

முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்டத் தொடங்கும். முடிக்குத் தேவையான இரும்புச் சத்து மற்றும்
கரோட்டின் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழும். சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

* யாருக்கெல்லாம் முடி கொட்டும்?

பால் கொடுக்கும் தாய்மாருக்கு குழந்தை பிறந்ததுமே கட்டாயம் முடி கொட்டும். காரணம், தாய்மைப்பேறை அடைந்ததுமே, குழந்தையின் வளர்ச்சிகான இருப்புச் சத்து மற்றும் புரதச் சத்து நிறைந்த மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனையில் தினம் எடுப்பார்கள். இது குழந்தையின் வளர்ச்சியோடு தாயின் ஆரோக்கியத்தையும் சேர்த்தே மேம்படுத்துகிறது. இதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முடி நன்றாக இருக்கும். ஆனால் குழந்தை பிறந்ததும் மருந்து மாத்திரைகளை எடுப்பதை தாய்மார்கள் நிறுத்தியதும் தானாகவே முடி பெண்களுக்கு கொட்டத் தொடங்குகிறது.

குழந்தை பால் குடியினை மறக்கும்போதும் முடி கொட்டும். தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தைக்காக ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவார்கள். நிறுத்தியதுமே ஆரோக்கியத்தை கண்டுகொள்ள தவறிடுவார்கள். செடிக்கு உரமிட்டு தண்ணீர் விடுவதை நிறுத்தினால் எப்படி வாடத் துவங்குமோ அதுமாதிரியான நிகழ்வே இதுவும். அதேபோல் நோய் எதிர்ப்பிற்காக மருந்துகளை அதிகமாக எடுப்பவர்களுக்கும் முடி கொட்டும். வயது முதிர்ச்சி காரணமாகவும் முடி தானாகக் கொட்டத் தொடங்கும். படிப்பு சுமை காரணமாக சரியான நேரத்திற்கு சரிவிகித உணவை எடுப்பதில்லை. இதனாலும் வளர் இளம் பருவத்தினருக்கு முடி கொட்டத் துவங்கும்.

* ஷாம்பு பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு?

பொடுகு இல்லாமலே ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்புகளைப் பயன்படுத்துவது, முடி கொட்டாமலே ஹேர் ஃபால் கன்ட்ரோல் ஷாம்புகளைப் பயன்படுத்துவது, ஷாம்பினை மாற்றி மாற்றி பயன்படுத்துவது, தரமற்ற மலிவு விலை ஷாம்புகளை பயன்படுத்துவது போன்றவற்றால் முடி கொட்டும்.

அடுத்த வாரம்..

* முடியில் வாடை ஏன் வருகிறது. அதை எப்படி சரி செய்வது?
* முடியினை எவ்வாறு பளபளப்பாக வைத்துக்கொள்வது?
* தலைமுடியினை எப்படி முறையாக சுத்தம் செய்வது?
* முடிக்குத் தேவையான ஹென்னா வீட்டில் தயாரிக்கும் முறை?

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!