ஆரணி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்-தொழிலாளிக்கு வலை

ஆரணி : ஆரணி அருகே பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர், கண்டக்டரை தாக்கிய கூலித்தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.ஆரணியில் இருந்து எஸ்.யு.வனம் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் வெங்கடேசன்(40) ஓட்டினார். கண்டக்டராக ஞானப்பிரகாசம்(41) பணியாற்றினார். ஆரணி அடுத்த சிறுமூர் கொட்டாமேடு அருகே பஸ் நிறுத்தத்தில் நின்ற பஸ் பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டது. அப்போது போதையில் நின்றிருந்த ஒருவர், பஸ்சை கைகளால் பலமாக அடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் வெங்கடேசன், கண்டக்டர் ஞானப்பிரகாசம் ஆகியோர் அவரை கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் டிரைவர், கண்டக்டரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் பஸ்சின் முன்புற கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்துள்ளார். பின்னர் டிரைவர், கண்டக்டரை கைகளால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த டிரைவர், கண்டக்டர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீஸ் எஸ்ஐ ஷாபுதீன் மற்றும் போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதில் போதையில் பஸ் கண்ணாடியை உடைத்த சிறுமூர் வடக்கு கொட்டாமேடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர்(40) என தெரியவந்தது. இதுகுறித்து டிரைவர் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சங்கரை தேடி வருகின்றனர்.

Related Stories: