மழை குறுக்கிட்டால் ஐபில் போட்டிகள் இப்படித்தான் நடக்கும் : பிளே ஆப், இறுதி போட்டிக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு!!

கொல்கத்தா: 15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிளே ஆப், எலிமினேஷன் மற்றும் இறுதி போட்டிக்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை, புனேவில் நடந்த லீக் சுற்றின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூர் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு  முன்னேறியுள்ளன.  அதில் இன்று நடக்கும் முதல் ‘தகுதிச் சுற்று’ ஆட்டத்தில் குஜராத் - ராஜஸ்தான் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும். தோற்கும் அணி 2வது குவாலிபயர் சுற்றில் விளையாட வேண்டும். நாளை நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் 3வது இடத்தில் உள்ள லக்னோ அணியும் 4ம் இடத்தில் உள்ள பெங்களூரு அணியும் மோதுகின்றன.

அதில் வெற்றி பெறும் அணி இன்று தோல்விக்காணும் அணியுடன் எதிர்வரும் 27ம் தேதி மோதும். அதில் வெற்றிபெறும் அணியே 29ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கும். கொல்கத்தாவில் மழை பெய்து வரும் நிலையில், புதிய அறிவிப்புகள், விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்றும் நாளையும் 27ம் தேதியும் நடைபெறும் ஆட்டங்களில் போது மழை குறுக்கிட்டால் மறு நாளில் ஆட்டம் நடத்தப்பட மாட்டாது. போட்டி நாளிலேயே 5 ஓவர் போட்டியாக நடத்தப்படும். அதற்கும் இயலாத சூழலில் சூப்பர் ஓவர் வீசப்படும். சூப்பர் ஓவரும் வீச முடியாத நிலை ஏற்பட்டால் லீக் ஆட்டம் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ள அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும். இறுதிப் போட்டியின் போது, மழை குறுக்கிட்டால் அடுத்த நாள் போட்டி நடத்தப்படும். ஆட்டத்தின் பாதியில் மழை வந்தால். அடுத்த நாள் ஆட்டம் பாதியில் இருந்தே தொடங்கும். தொடர்ந்து மழை பெய்தால் சூப்பர் ஓவர் வீசப்படும்.

Related Stories: