கும்மிடிப்பூண்டியில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..!!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்ட் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியாவுக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் கடந்த 13ம் தேதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது, கீழ் லிப்ட் அறுந்து விழுந்து கேட்ரிங் ஊழியரான 11ம் வகுப்பு மாணவன் சீத்தல் உயிரிழந்தார். கீழ் தளத்தில் சமையல் செய்யப்பட்டு லிப்ட் மூலம் முதல் தளத்திற்கு கொண்டு சென்ற போது இந்த துயரம் நடந்திருக்கிறது. விபத்தில் காயமடைந்த ஜெயராமன், விக்னேஷ் ஆகிய இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருமண மண்டபத்தின் உரிமையாளரான ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியா உள்ளிட்ட 4 பேர் மீது கவன குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமண மண்டபத்தின் மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். ஜெயக்குமார் மகள் ஜெயப்பிரியா தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் லிப்ட் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: