கவர்ச்சி திட்டங்கள் எதிரொலி!: தி.மலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 6 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருவண்ணாமலையில் ஆருத்ரா கோல்டு நிறுவனங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆதிகேசலு தெரு பகுதியில் ஆருத்ரா கோல்டு என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில், ஒரு நபர் சுமார் 1 லட்சம் தொகையை டெபாசிட் செய்தால் மாதம் 30 ஆயிரம் தரப்படும் என பல சலுகையை அறிவித்துள்ளனர். இந்த சலுகையால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.

தொடர்ந்து, அதிரடி கவர்ச்சி திட்டங்களை அறிவித்ததால் அந்நிறுவனத்தின் மீது பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வந்துள்ளனர். அதன்பேரில் ஏற்கனவே இந்நிறுவனத்தில் செய்யாறு வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சோதனை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது இன்று காலை 6 மணி முதல் 6 பேர் கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை செய்து வருகிறது. சோதனையில், பல்வேறு ஆவணங்களின் முறையான கணக்குகளை சரிபார்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் சென்னை, அமைந்தகரை, முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட 4 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: