தமிழகம், கர்நாடகா, கேரளாவிலிருந்து பக்தர்கள் வருகை ஏழுமலையானை தரிசிக்க 7 மணி நேரம் காத்திப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தமிழகம், கர்நாடகா, கேரளாவிலிருந்து குவிந்த பக்தர்கள் 7 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இலவச தரிசனத்தில் எவ்வித டிக்கெட்டுகளும் இன்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக திருமலையில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அறைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை நிலவரப்படி வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 19 அறைகளில் பக்தர்கள் நிரம்பி இருந்தனர். இவர்கள் 7 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பக்தர்கள் 3 முதல் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் ஒரேநாளில் 89 ஆயிரத்து 665 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 35 ஆயிரத்து 794 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய உண்டியல் காணிக்ைக நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில், ₹3.98 கோடி காணிக்கையாக கிடைத்தது. ஏழுமலையானை தரிசித்து விட்டு அவரவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல திருமலையில் உள்ள பஸ் நிலையத்தில் திரண்டனர். அவர்கள் பஸ்சில் முண்டியடித்து கொண்டு ஏறிச்சென்றனர்.

ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் 24ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதேபோல் ஆகஸ்ட் மாதத்திற்கான சுப்ரபாதம்,  தோமாலை, அர்ச்சனை, ஜூலை மாதத்திற்கான அஷ்டதலபாத பத்மாராதனை சேவை டிக்கெட்டுகள் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.  

பக்தர்கள் வருகிற 26ம் தேதி மாலை 3 மணி வரை இந்த டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். அன்று மாலை 6 மணிக்கு ஆன்லைனில் எலக்ட்ரானிக்  குலுக்கல் செய்து டிக்கெட் பெற்றவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான மெய்நிகர் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், உஞ்சல் சேவை மற்றும் சகஸ்கரதீப அலங்கார சேவை டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு 25ம் தேதி காலை 9 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: