அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் 21வது சட்டத்திருத்தம் தாக்கல்: இலங்கை பிரதமர் ரணில் தகவல்

கொழும்பு: இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை பறிக்கும் 21வது சட்டத் திருத்தம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு சென்ற ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக மக்கள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி அந்நாட்டு நாடாளுமன்றத்தை காட்டிலும் அதிபருக்கே அதிக அதிகாரங்கள் உள்ளன. தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்சேக்கு எதிராக மக்கள் கொந்தளித்துள்ளதால், அதிபருக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்பு 20ஏ சட்டத் திருத்தத்தை நீக்கிவிட்டு, 21வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

சமீபத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, ‘அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்படும்’என்று உறுதியளித்திருந்தார். இதுதொடர்பாக, அரசு தலைமை வழக்கறிஞர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த 16ம் தேதி ஆலோசனை நடத்தினார். அதன்படி, நாடாளுமன்றத்துகே கூடுதல் அதிகாரம் வழங்குவது, இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது, மத்திய வங்கியின் ஆளுநரை நாடாளுமன்றத்திற்கு கீழ் நியமிப்பது போன்ற திருத்தங்கள் அடங்கிய 21வது சட்ட திருத்தம் அமைச்சரவை ஒப்புதலுக்கு நேற்று அனுப்பி வைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் 21வது சட்டத்திருத்ததுக்கு ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனவின் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 21வது சட்ட திருத்தத்தை அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பாமல் பிரதமர் ரணில் பின்வாங்கியதாக முதலில் தகவல் வெளியாகின. பின்னர் இதுதொடர்பாக பேட்டி அளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ‘‘அமைச்சரவையில் 21வது சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து கட்சியினரிடம் கருத்து கேட்கப்படும். பின்னர் அமைச்சரவையில் இறுதி முடிவெடுக்கப்படும். இதற்கு முன்பாக யார் வேண்டுமானலும் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடலாம்’’ என்றார்.

நிதித்துறைக்கு அமைச்சரை நியமிக்கவில்லை

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பின், முதல் கட்டமாக 4 அமைச்சர்கள் பதவியேற்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மேலும் 9 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், நேற்று மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் மஹிந்த அமரவீர (விவசாயம்), டக்ளஸ் தேவானந்தா (மீன்வளம்), பந்துல குணவர்தன (போக்குவரத்து) உள்ளிட்ட 8 பேர் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். ஆனால், தற்போது நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் நிதித்துறைக்கு இதுவரை அமைச்சர் யாரும் நியமிக்கப்படவில்லை.

மருந்துக்கு கடும் தட்டுப்பாடு

இலங்கையில் பெட்ரோல், மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் நோயாளிகள் உயிருக்கு போராடி வருகின்றனர். மருந்துகள் இல்லாமல் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என டாக்டர்களும் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பள்ளித் தேர்வுகள் நேற்று தொடங்கின. இதில் பள்ளி வாகனங்களுக்கு டீசல் கிடைக்காததால், மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதில் கூட சிக்கல் நிலவியது. ஹல்தமுல்ல என்ற பகுதியில் பிறந்து 2 நாளே ஆன குழந்தை மஞ்சகாமாலையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனத்திற்கு பெட்ரோல் கிடைக்காமல், சரியான நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாததால், அந்த குழந்தை பரிதாபமாக இறந்ததாக குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.

40,000 மெட்ரிக் டன் பெட்ரோல் அனுப்பிய இந்தியா

இலங்கைக்கு இந்தியா பல்வேறு அத்தியாவசிய உதவிகளை செய்து வருகிறது. உணவு பொருட்கள், மருந்துகள், எரிபொருள் என பல்வேறு உதவிகளை கப்பல்கள் மூலமாக கொழும்புக்கு அனுப்பி வருகிறது. aகடந்த சனிக்கிழமை 40,000 மெட்ரிக் டன் டீசலை இலங்கைக்கு இந்தியா அனுப்பி இருந்தது. இந்நிலையில், நேற்று 40,000 மெட்ரிக் டன் பெட்ரோலை இலங்கைக்கு ஒன்றிய அரசு அனுப்பி உள்ளது.

Related Stories: