சீனர்களுக்கு விசா பெற்ற விவகாரம் கைதான ஆடிட்டருக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வாங்கி தருவதற்கு ₹50 லட்சம் லஞ்சமாக பெற்ற விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு மேலும் மூன்று நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010- 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் திட்ட பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ₹50 லட்சம் தொகையை முறைகேடாக பெற்றதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சென்னையில் சிபிஐ கைது செய்தது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாஸ்கர ராமனுக்கு நான்கு நாட்கள் சிபிஐ காவல் வழங்கி கடந்த 19ம் தேதி உத்தரவிடப்பட்டது.

இந்த காவல் நேற்றோடு முடிவடைந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தினர். மேலும் மூன்று நாட்கள் பாஸ்கர ராமனுக்கு சிபிஐ காவலை நீட்டித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.  முன்னதாக இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், அவர் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இந்தியா திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: