உலக சுகாதார அமைப்பு கவுரவிப்பு ஆஷா ஊழியர்களின் அர்பணிப்புக்கு விருது

புதுடெல்லி: உலக பேரிடரான கொரோனா தொற்றின் போது அயராமல் இரவு, பகல் என்று பாராமல் உழைத்த 10 லட்சம் ஆஷா ஊழியர்களுக்கு உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.நாட்டின் பல்வேறு கிராமங்களில்  ஆஷா பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் கொரோனா காலத்தில் வீடு வீடாக சென்று நோயாளிகளை அடையாளம் கண்டு அவர்களை பற்றிய தகவல்களை சுகாதார நிலையங்களுக்கு தெரிவித்து பெரும் தொண்டாற்றினர். நோய் தொற்றின் போது மக்கள் வெளியில் வரவே பயப்பட்ட காலகட்டத்தில் இவர்களின் சேவை மிகவும் அனைவரின் பாராட்டை பெற்றது.இந்நிலையில் ஜெனீவாவில் 75வது உலக சுகாதார அமைப்பின் மாநாடு நடைபெற்றது.

இதில் உலக  சுகாதாரத்துக்காக தலைமைப் பண்புடனும் சுகாதார பிரச்னைகளை தீர்க்க அர்ப்பணிப்புடன் பாடுபட்ட 10 லட்சம் ஆஷா பணியாளர்களுக்கு சர்வதேச மருத்துவ தலைவர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிடுகையில், சர்வதேச விருது பெற்ற ஆஷா பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள். சுகாதாரமான இந்தியாவை உருவாக்குவதில் அவர்களின் பங்கு முக்கியமானது. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதி பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆஷா பணியாளர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ஆஷா பணியாளர்களுக்கு சிறந்த ஊதியம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: