ஆளுங்கட்சியினர் தலையீட்டால் பலாத்கார வழக்கில் பின்னடைவு: பாதிக்கப்பட்ட நடிகை திடீர் மனு

திருவனந்தபுரம்: நடிகர் திலீப்புக்கும், ஆளுங்கட்சியை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதால் பலாத்கார வழக்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று பாதிக்கப்பட்ட நடிகை மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போதும் இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் தற்போது நடைபெற்று வரும் தொடர் விசாரணை அறிக்கையை வரும் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய கேரள உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை நேற்று திடீரென கேரள அரசு மற்றும் விசாரணை நீதிபதிக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நடிகர் திலீப்புக்கும், ஆளுங்கட்சியை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. இதனால் அரசியல் தலையீடு காரணமாக இந்த வழக்கில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சாட்சிகளை கலைத்ததற்கான ஆதாரங்கள் இருந்தும் திலீப்பின் வழக்கறிஞர்களிடம் இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

தொடர் விசாரணை முழுமையாக முடியாத நிலையில் அரைகுறையாக பாதி வெந்த நிலையில் அறிக்கையை தாக்கல் செய்ய போலீசார் தீர்மானித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விசாரணை நீதிபதியின் பல நடவடிக்கைகளும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே உயர்நீதிமன்றம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனக்கு நீதி கிடைக்குமா என இப்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வேறு வழி இல்லாததால் தான் இந்த மனுவை தாக்கல் செய்கிறேன்’ என கூறி உள்ளார்.

பாதிக்கப்பட்ட நடிகை இந்த குற்றச்சாட்டு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: