சில்லி பாயின்ட்...

* ஜகார்தாவில் நேற்று தொடங்கிய ஆசிய கோப்பை ஹாக்கித் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதிய ஏ பிரிவு லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவானது. 8வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் தமிழக வீரர் கார்த்திக் செல்வம் கோல் அடித்தார். 58வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் அப்துல் ராணா பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து சமன் செய்தார். இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று மாலை ஜப்பானுடன் மோதுகிறது.

* காட்மாண்டுவில் இந்தியா - நேபாளம் மோதும் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடர் (3 போட்டி, ஜூன் 10-12) நடைபெற உள்ளது. இத்தொடருக்கான இந்தியயில் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (அரியலூர்), மணிவண்ணன் (சேலம்), ஷாகுல் அமீது (திருப்பூர்) இடம் பெற்றுள்ளனர்.தேசிய அணியில் இடம் பிடித்துள்ள இவர்களுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர் ரமேஷ் கண்ணன், மேலாளர் ஹரி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

* மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் இலங்கைக்கு எதிராக நேற்று தொடங்கிய 2வது டெஸ்டில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்துள்ளது. ஹசன் ஜாய், தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் டக் அவுட்டான நிலையில், ஷான்டோ 8, கேப்டன் மோமினுல் ஹக் 9 ரன்னில் அவுட்டாகினர். முஷ்பிகுர் ரகிம் 115 ரன், லிட்டன் தாஸ் 135 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

* ஒன்றிய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் கபடி, வாள்வீச்சு விளையாட்டுகளில் இலவசமாக தங்கி பயிற்சி பெற திருச்செங்கோட்டில் தேர்வு முகாம் நடைபெற உள்ளது. யு14 மற்றும் யு17 என 2 பிரிவுகளாக மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மே 28க்குள் பதிவு செய்ய வேண்டும். தேர்ச்சி பெறுபவர்கள் கேலோ இந்தியா விளையாட்டு விடுதிகளில் தங்கி உணவுடன் பயிற்சியையும், படிப்பையும் இலவசமாகப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு: 96552 49942 (வாள்வீச்சு), 97870 97828 (கபடி).

Related Stories: