உலகின் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியலில் அதானி: டைம் இதழ் புகழாரம்

புதுடெல்லி: ‘டைம்’ இதழின்  2022ம் ஆண்டிற்கான உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் தொழிலதிபர் கவுதம் அதானி இடம் பெற்றுள்ளார். குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி, ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக உள்ளார். தற்போது இவர், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்’ இதழின் உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இப்பட்டியலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், டென்னிஸ் விளையாட்டு நட்சத்திரம் ரபெல் நடால், ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதானி குழுமம் விமான நிலையங்கள், தனியார் துறைமுகங்கள், சூரிய மின்சக்தி மற்றும் அனல் மின்சாரம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய தொழில்களில் சிறப்புடன் இருப்பதாகவும், அமைதியாக தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தி வருவதாகவும் டைம் இதழ் புகழ்ந்துள்ளது. இப்பட்டியலில், உச்ச நீதிமன்ற பெண் வக்கீலும், சமூக ஆர்வலருமான கருணா நந்தியும் இடம் பெற்றுள்ளார்.

Related Stories: