தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு

பீளமேடு: கழிவு பஞ்சு விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் மற்றும் விஸ்கோஸ் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர்கள் சங்கம் என்று அழைக்கப்படும் ஓபன் எண்ட் மில்கள்  சங்கத்தின் சேர்மன் அருள்மொழி அளித்த பேட்டி: ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சு கொண்டு நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் மில்களில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மாதந்தோறும் 25 லட்சம் கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமாக ஸ்பின்னிங் மில்கள் மாதம் ஒருமுறை மட்டுமே கழிவுப் பஞ்சு விலையில் மாற்றத்தை செய்வார்கள். கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கிலோ ‘கோம்பர் கழிவு பஞ்சு’ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று  ‘கோம்பர் கழிவு பஞ்சு’ ஒரு கிலோ 155 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு காரணமாக நூல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நூலை நம்பி பல்லடம், சோமனூர்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கைத்தறி மற்றும் விசைத்தறி நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு  தள்ளப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓபன் எண்ட்  மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலை கொண்டு தயாரிக்கப்படும் போர்வைகள், திரை சீலைகள் போன்ற ஜவுளிப் பொருட்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளித்து வருகிறது. கழிவு பஞ்சு விலை  உயர்வு காரணமாக ஜவுளி பொருட்கள் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் தினமும் கழிவுப் பஞ்சு விலையை உயர்த்தி வருவதே இதற்கு முக்கிய காரணம். எனவே கழிவுப் பஞ்சு விலை உயர்வு காரணமாக பாலியஸ்டர் விஸ்கோஸ் நூல் உற்பத்திக்கு மாற அனைத்து ஓபன் எண்ட் மில் நிர்வாகத்தினரும் முடிவு செய்துள்ளனர்.

ஸ்பின்னிங் மில்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பஞ்சு சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.  இவற்றை ஓபன் எண்ட் மில்கள் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாது. கழிவுப் பஞ்சை பெற்று அவற்றில் இருந்து  நூல் உற்பத்தி செய்து ஜவுளி பொருட்களை தயாரிக்க உதவி வரும் ஓபன் எண்ட்  மில்களின் நிலையை கருத்தில் கொண்டு ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் உடனடியாக கழிவுப் பஞ்சு விலையை கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: