பொதுமக்கள் சரமாரி புகார் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை : எம்பி செல்வம் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், எம்பி செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது  ரயில், பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த காற்றுடன் பெய்த கனமழையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் மேற்கூரை காற்றில் பறந்தது. தற்போது நடைமேடையில் மேற்கூரை இல்லாததால், மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான   பயணிகள், கடும் அவதியடைகின்றனர். மேலும், ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்தது.

இந்நிலையில், எம்பி செல்வம், நேற்று செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த ரயிலில் ஏறி, அதில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதில், தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், மின்சார ரயில்கள் எந்தெந்த நடைமேடைக்கு வருகிறது என்பது குறித்து அறிவிக்கப்படுவதில்லை. ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை.ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. ரயில்களின் வருகை, புறப்பாடு விவரங்கள் இந்தியில் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. தமிழில் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டிக்கெட் கவுன்டரில் திருமால்பூர், காஞ்சிபுரத்துக்கு ரயில் புறப்படும் நேரம் குறித்து கேட்டால், அங்குள்ள ஊழியர்கள் முறையான பதில் தெரிவிப்பதில்லை என பயணிகள் சரமாரியாக புகார் கூறினர். அதற்கு அவர், பயணிகளின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பின்னர் எம்பி செல்வம், ரயில் நிலையத்தில் உள்ள கேன்டீனில் உணவு தரமாக உள்ளதா என ஆய்வு செய்து, அதனை சாப்பிட்டு பார்த்தார். மேலும், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அமைக்கப்படும் மாடி பார்க்கிங் மற்றும் எக்சலேட்டர் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, அந்த பணிகளை விரைந்து முடித்து, பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories: