பெண்ணை சரமாரி தாக்கி வீட்டை அபகரிக்க முயன்ற ரவுடி உள்பட 2 பேர் கைது

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு கூவம் சாலையை சேர்ந்தவர் வசந்தா (25). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வசந்தா வீட்டிற்கு வந்த 2 பேர், ‘நாங்கள் இந்த வீட்டை விலைக்கு வாங்கி விட்டோம். எனவே, நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர். அதற்கு வசந்தா, நாங்கள் முறையாக வாடகை மற்றும் மின்சார கட்டணம் கொடுத்து வருகிறோம். வீட்டை காலி செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும், உருட்டுக்கட்டையால் வசந்தாவை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வசந்தா புகார் அளித்தார். விசாரணையில், சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் நகரை சேர்ந்த மோகன் (எ) தர்கா மோகன் (57), தனது மருமகன் தினேஷ் (35) என்பவருடன் சேர்ந்து, அந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டது தெரியவந்தது. மேலும், தர்கா மோகன் மீது கொலை உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து அந்த இருவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: