வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி கைதான ஆசாமிக்கு சொந்தமான 5 இடங்களில் போலீஸ் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை செய்யப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னையில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி,   ரூ.3 கோடி அபேஸ் செய்ததுடன், போலியான நேர்முக தேர்வுகளை நடத்தி, அதில் பங்கேற்றவர்களுக்கு போலி பணிநியமன ஆணைகளை வழங்கிய மோகன்ராஜ் மற்றும் அவருடைய முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தனசேகர் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த மார்ச் மாதம் மோகன்ராஜை கைது செய்தனர். இது தொடர்பாக ஏற்கனவே முகப்பேரில் நடத்தி வந்த வனாஸ்பையர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு  தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பெரம்பூர், தி.நகர், பாடி, செங்குன்றம், கன்னிகைப்பேர் பகுதியில் இவருக்கு சொந்தமான 5 இடங்களில் நேற்று போலீசார் சோதனை செய்தனர். அவற்றில் ஒரு இடத்துக்கு சீல் வைக்கப்பட்டு மற்ற இடங்களில் நடந்த சோதனையில் 9 லேப்டாப்கள், 1 கணினி, 370 பயோடேட்டாக்கள், 71 உண்மை சான்றிதழ்கள், 150 சான்றிதழ் நகல்கள், 400 படிவங்கள்  ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: