நீதிபதிகளை குற்றம்சாட்டுவது இப்போது பேஷனாகி விட்டது: உச்ச நீதிமன்றம் வேதனை

புதுடெல்லி: ‘நீதிபதிகள் மீது குற்றம்சாட்டுவது இப்போது பேஷனாகி விட்டது’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் ஒருவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 2 வார சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்ற கோடைக்கால விடுமுறை அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சந்திரசுட், பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மனுதாரருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளை பதவியில் இருந்து திரும்ப பெற மனுதாரர் கோரும் செயலை உச்சநீதிமன்றம் மோசமாக பார்க்கிறது.

நீதித்துறையின் மீது மரியாதை இல்லாதது போல மனுதாரரின் செயல் உள்ளது. மனுதாரர், வழக்கறிஞர் தொழிலுக்கு ஒரு கறை. இப்போதைய சூழலில் நீதிபதிகள் மீது மோசமான குற்றச்சாட்டை முன்வைப்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது. இது போன்ற செயல் உத்தரபிரதேசம், மும்பை, சென்னை நீதிமன்றங்களில் பரவலாக உள்ளது. மேலும், நீதிபதிகள் மீது உடல் ரீதியான தாக்குதல் நடப்பதும் கவலை அளிக்கிறது. மாவட்ட நீதித்துறையில் நீதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனை குறைந்த பட்சமே. இவ்வாறு கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: