ஜிபிஎஸ் அடிப்படையில் அடுத்த பஸ் ஸ்டாப் குறித்து பஸ்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னை: அரசு பஸ்களில் பயணிப்போரின் வசதிக்காக ஜிபிஎஸ் அடிப்படையில் அடுத்த பஸ் ஸ்டாப் குறித்து ஒலிபெருக்கு மூலம் அறிவிக்கும் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. இதன் ஒருபகுதியாக 500 எம்டிசி பஸ்களில் விரைவில் இதற்கான வசதியினை ஏற்படுத்த போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமாக சென்னை (எம்டிசி), விரைவுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக உள்ளூர், நகரப் பகுதி, கிராமப் பகுதி, நகரங்களுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையேயான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகளை பயன்படுத்தி நாள்தோறும் 1.55 கோடி மக்கள் பயணித்து வருகின்றனர்.

இதுதவிர 7,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும், 4 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய பேருந்துகளும் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகப்படியான மக்கள் அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருவதால், அதில் பல்வேறு விதமான வசதிகளும், சலுகைகளும் புகுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண் பயணிகளுக்கு அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதற்காக தமிழகத்தில் 7,321 சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி தினசரி 36 லட்சம் பெண் பயணிகள் பயணம் செய்கின்றனர். இதேபோல் நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மேலவை முன்னாள் உறுப்பினர்கள், திருநங்கைகள், 40% மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள், மத்திய, மாநில அரசால் ஓய்வூதியம் பெறும் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் விதவைகள், வாரிசுதாரர்கள், தமிழறிஞர்கள், மொழிபோர் தியாயிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள், புற்றுநோயாளிகள், நாடகக் கலைஞர்கள், எச்ஐவி நோயாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கும்  சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் வசதிகளை பொறுத்தவரை பெண்கள் பாதுகாப்பு நகரத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலமாக பொது இடங்களில் குறிப்பாக பேருந்துகள், பேருந்து நிலையங்கள், பணிமனைகள் போன்ற பொதுபோக்குவரத்து அமைப்புகளில் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில் 2500 பேருந்துகள், பேருந்து முனையங்கள், பணிமனைகள், அலகுகள் போன்றவற்றில் கேமராக்கள் பொருத்துதல் மற்றும் அவசரத் தேவைகளுக்கான எச்சரிக்கை அழைப்பு  பொத்தான்கள் அமைத்தல் போன்றவற்றின் மூலம் பேருந்துகளைக் கண்காணிப்பதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் முன்னோட்டமாக 500 பேருந்துகள் மற்றும் 30 பேருந்து முனையங்கள் மற்றும் பணிமனைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் தகவல் அமைப்பு திட்டத்தின் மூலம் சென்னையில் பேருந்து பயணிகள் பேருந்திற்காக காத்திருக்காமல் பேருந்து பயணத்தை திட்டமிடுவதற்கு நேரடி பயணிகள் தகவல் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பேருந்தின் புறப்பாடு, சேருமிடம் மற்றும் வழியினை வரைபடத்தில் காண்பிக்கும். மேலும் பல வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளதால் பயணிகளிடத்தில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜிபிஎஸ் அடிப்படையில் தானியங்கி பேருந்து நிறுத்தி அறிவிப்பு அமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. இது நெரிசல்மிகு நேரங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பேருந்து நிறுத்த அறிவிப்பு அமைப்பு மிகவும் உதவியாக இருக்கும். இதன்மூலம் பேருந்து நிறுந்தங்களை அறிந்துகொள்ள பயணிகள் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.  தற்போது இவ்வசதியானது முதற்கட்டமாக சென்னையில் இயக்கப்படும் 500 பேருந்துகளில் கொண்டுவருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிற  இடங்களில் இருந்து நகர்புறங்களுக்கு வருவோருக்கு அனைத்து பஸ்  ஸ்டாப்புகளும் தெரியாது. அப்போது அவர்கள் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய  நிலை உள்ளது. எனவே இவற்றை தடுக்கும் வகையில் ஜிபிஎஸ் அடிப்படையில் அடுத்த  பஸ் ஸ்டாப் குறித்து முன்னதாகவே அறிவிக்கும் வசதி கொண்டுவரப்படவுள்ளது. இவ்வசதியானது 500 எம்டிசி பஸ்களில் முதலில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும் இந்த பேருந்து நிறுத்த அறிவிப்பு இடைவெளியில் விளம்பரங்கள்  ஒளிபரப்பப்படும். இதன்மூலம் போக்குவரத்துக்கழகங்களுக்கு வருவாய்  கிடைப்பதுடன், பயணிகளுக்கு அடுத்த பஸ் ஸ்டாப் குறித்து எளிதாக தெரிந்து  கொள்ள வசதியாக இருக்கும். தற்போது இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இது படிப்படியாக அனைத்து பஸ்களிலும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேருந்துகளின் எண்ணிக்கை

போக்குவரத்து கழகம்    பஸ்கள்

எம்டிசி    3,454

விரைவு    1,110

விழுப்புரம்    3,299

சேலம்    2,059

கோவை    2,866

குடந்தை    3,441

மதுரை    2,302

நெல்லை    1,773

மொத்தம்    20,304

Related Stories: