பெட்ரோல், டீசல் விலை குறைவால் தக்காளி, பீன்ஸ் விலை சரிவு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சென்னை: தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றின் விலை முறையே 100, 90 ரூபாய்க்கு கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்பட்டது. தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பரவலாக பெய்த மழை, வரத்து குறைவு காரணமாக,  தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன்காரணமாக, சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், கடந்த சில தினங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை இந்த மார்க்கெட்டுக்கு 38 வாகனங்களில் சுமார் 450 டன் தக்காளி வந்தது. இதனையடுத்து, நேற்று முன்தினம் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.100க்கும், பெங்களூரூ தக்காளி ரூ.110க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில், ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்ததால், அவற்றின் விலை குறைந்தது. இதனையடுத்து, நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.90க்கும், பெங்களூரூ தக்காளி ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் பீன்ஸ் ரூ.110லிருந்து ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிலோ கேரட் ரூ.30லிருந்து ரூ.40க்கு விற்பனையானது. இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ் முத்துக்குமார் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் தக்காளி விலை 10 ரூபாயும், பீன்ஸ் 30 ரூபாயும் குறைந்துள்ளது. கேரட் விலை 10 ரூபாய் உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100லிருந்து 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் ரூ.110லிருந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: