ஆட்டோ உதிரி பாகம், ஜவுளி, தோல் பொருட்கள் தயாரிப்பில் மிகப்பெரிய உற்பத்தி மையமாக தமிழகம் உருவாகியுள்ளது: தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

சென்னை: ஆட்டோ பாகங்கள், ஜவுளி, தோல் பொருட்கள் தயாரிப்புகளுக்கான மிகப்பெரிய உற்பத்தி மையமாக தமிழகம் உருவாகியுள்ளது என தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 2018-19ம் ஆண்டிற்கான செஸ் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்றுமதி சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள மெப்ஸ் செஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

மேலும், சென்னை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாலினி சங்கர், சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தின் மேம்பாட்டு ஆணையர் சண்முக சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விருதுகளை வழங்கிய பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:  ஏற்றுமதியாளர்களின் கடின உழைப்பால் நாட்டின் ஏற்றுமதி சமீப ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது கொரோனா காலத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. நாடு முழுவதும் 775 மாவட்டங்களில் பெரும்பாலானவை ஏற்றுமதி மையங்களாக மாறும் சாத்தியக்கூறுகள் உள்ளன. எளிதாக வணிகம் செய்வதன் மூலம் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

புவிசார் குறியீடு கொண்ட தயாரிப்புகள் உள்ளூர் தயாரிப்புகளை உலக அளவில் சந்தைக்கு உயர்த்த உதவுகிறது. 2021-22ம் ஆண்டில் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனங்கள் ரூ.1,32,503 கோடி ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டின் மிகவும் வளர்ந்த தொழில்துறை உற்பத்தி, சுற்றுச்சூழல் அமைப்பானது பாராட்டத்தக்கது. ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ பாகங்கள், ஜவுளி, தோல் பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கான மிகப்பெரிய உற்பத்தி மையமாக தமிழகம் உருவாகியுள்ளது. வன்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து தேசிய அளவில் முன்னணியில் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: