வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவது சவால் மிகுந்தது: தமிழக மருத்துவர்கள் கவலை

சென்னை: மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் இந்தியாவில் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் திறன் ஆகியவற்றால்  கணிசமான எண்ணிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மருத்துவம் படித்தவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இதற்கு சமமாக இந்தியாவைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் பயின்று வருகின்றனர். அவ்வாறு வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள், ஸ்கிரீனிங் டெஸ்ட் முடித்த பின் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்ற பின் தான் இந்தியாவில் சேவை செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்திய மருத்துவமனைகளில் பயிற்சி பெறுவது என்பது மிகுந்த சவாலாக உள்ளதாக வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ரஷ்யாவில் மருத்துவம் பயின்ற தமிழக மருத்துவர் கூறும்போது, ‘‘ வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையில் இந்தியாவில் ஸ்கிரீனிங் டெஸ்டில் தேர்ச்சி  பெறுகின்றனர். ஆனால் இதுவரையிலும் அவர்கள் இந்திய மருத்துவமனைகளில் பயிற்சி பெறவில்லை என்பது கசப்பான உண்மை. இனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் தான் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் பயிற்சி பெற வேண்டும் என கடந்த ஆண்டு நவ.18ம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. அதோடு மட்டுமில்லாமல் பயிற்சிக்கு வழங்கப்பட்ட 10% ஒதுக்கீடு 7.5% ஆக குறைக்கப்பட்டது. ஸ்கிரீனிங் டெஸ்ட் தேர்ச்சி பெற்ற 2 ஆண்டுகளுக்குள் பயிற்சி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட கால வரையறைக்குள் 7.5% ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி  பெற இடம் கிடைப்பது  போராட்டமாகவே உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற தமிழர்கள் தான். தமிழ்நாட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 230 இடங்களே பயிற்சி மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 600 பேர் இந்த இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்’’ என்று கூறினார். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற தமிழர்களின் நிலையை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெறவும், சிக்கலான இந்த நடைமுறையை மாற்றி எளிமையாக அணுக வழிவகை செய்ய வேண்டும் என கோரியும் கடந்த ஜனவரி மாதம் இது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.

இத்தகைய நடைமுறை சிக்கல்கள் மற்றும் முதுகலை நீட் தேர்வு குழப்பங்கள் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கு செல்கின்றனர். அதே வேளையில் சுமார் 20 ஆயிரம் பேர் இந்தியாவில் ஸ்கிரீனிங் டெஸ்டிற்கு விண்ணப்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் இந்தியாவில் சேவை செய்வதற்கான நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என்பதே அவர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையில் இந்தியாவில் ஸ்கிரீனிங் டெஸ்டில் தேர்ச்சி பெறுகின்றனர்.

Related Stories: