உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கம் ரூ.10.7 லட்சம் கரன்சி பறிமுதல்: 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.1.35 கோடி மதிப்புள்ள 2.9 கிலோ தங்கம் மற்றும் ரூ.10.7 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்தனர். வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்க அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று காலை வரை வெளிநாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

இந்நிலையில், துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த நிஷாமண்டேலா (32) என்ற பயணி காலனியில் மறைத்து 1.4 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.65 லட்சம். இதேபோல், சார்ஜா மற்றும் இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானங்களில் 2 பெண் பயணிகள் உட்பட 6 பேர் உள்ளாடைக்குள் தங்க நகைகள், தங்க பசைகளை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர. அதன் மதிப்பு ரூ.70 லட்சம்.

தொடர்ந்து, சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த துபாய் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை சோதனையிட்டபோது, ராமநாதபுரத்தை சேர்ந்த தமிமுன் அன்சாரி (27). சென்னையை சேர்ந்த முகமது நாகூர் (24) ஆகிய 2 பயணிகள் சுற்றுலா விசாவில் துபாய் செல்ல வந்திருந்தனர். அவர்களுடைய உள்ளாடையில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் யூரோ கரன்சி மறைத்து வைத்திருந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10.7 லட்சம் மதிப்புள்ள கரன்சியை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.

Related Stories: