ஹெல்மெட் அபராதம் தொடங்கியது: பின்னால் அமர்ந்தவர்களும் சிக்கினர்; ஒரே நாளில் 3,926 பேர் மீது வழக்கு; போக்குவரத்து போலீஸ் அதிரடி

சென்னை: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் நடைமுறை சென்னையில் நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து சென்னை மாநகரம் முழுவதும் 312 இடங்களில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர். சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இருசக்கர வாகனம் ஓட்டும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை மாநகரம் முழுவதும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல் துறை சார்பில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறையை நேற்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.இதையடுத்து சென்னை மாநகர காவல் எல்லையில் இரு சக்கர வாகனம் ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் நபரும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் நேற்று காலை முதல் 312 இடங்களில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, வேப்பேரியில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ராஜிவ் காந்தி சாலை, வடபழனி 100 அடி சாலை என மாநகர காவல் எல்லையில் உள்ள முக்கிய சந்திப்புகளில் இந்த அதிரடி சோதனை நடந்தது.

இந்த சோதனையின் போது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்த சோதனையில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது அபராதம் விதிப்பதை  போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி சரட்கர் நேற்று மதியம் பார்வையிட்டார். மேலும், வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்தில்லா நகரை அடைய சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வழக்குப்பதிவு: சென்னை, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிய 634 பேர், பின் இருக்கையில் அமர்ந்து சென்ற 483 பேர், தெற்கு மண்டலத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 591 பேர், பின் இருக்கையில் அமர்ந்து சென்ற 696 பேர், கிழக்கு மண்டலத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 678 பேர், பின் இருக்கையில் அமர்ந்து சென்ற 844 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று 6 மணி நிலவரப்படி ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டியதாக 1,903 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற 2,023 பேர் என மொத்தம் 3,926 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related Stories: