தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 104 டிகிரி வெயில்

சென்னை: கத்திரி வெயில் முடியவுள்ள நிலையில் சென்னையில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் ஏற்பட்ட வெப்பசலனத்தால் தமிழகத்தில் 27ம் தேதி வரை சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயிலின்  தாக்கம் அதிகரித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. இடையில் சில நாட்கள் மழை பெய்தாலும், மீண்டும் வெயில் தலை காட்டத் தொடங்கியுள்ளது. கத்திரி வெயில் 29ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், நாட்டில் பல்வேறு வட மாநிலங்களில் அதிகபட்சமாக 114 டிகிரி வரை வெயில் எகிறியது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலேயே சென்னையில் 104 டிகிரியும், கடலூரில் 102 டிகிரியும் வெயில் நிலவியது. நாகப்பட்டினம்,ம துரை, திருத்தணி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. ராமநாதபுரம், திருவள்ளூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இயல்பைவிட 2 மதல் 4 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக வெயில் நிலவியது. இந்நிலையில், வெப்ப சலனம் ஏற்பட்டு வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் தமிழகம், புதுச்சேரி, பெரும்பாலான இடங்களில் 27ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் வெப்ப சலனம் காரணமாக மாலை மற்றும் நள்ளிரவில் இடியுடன் கூடிய மழை நகரின் சில இடங்களில் பெய்யும் வாய்ப்புள்ளது.

Related Stories: