விழுப்புரத்தில் பரபரப்பு கழுத்தை அறுத்து முன்னாள் கவுன்சிலரை கொல்ல முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கழுத்து அறுபட்ட நிலையில் சாலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அகமது (57). இவர் விழுப்புரம் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுப்பது, டெண்டர் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலையில் விழுப்புரம் அடுத்துள்ள அகரம் செங்கமேடு செல்லும் சாலையில் கழுத்து அறுபட்ட நிலையில் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது கழுத்துப் பகுதியின் குரல்வலையில் ஆழமாக அறுபட்டுள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அகமது கழுத்தை அறுத்து சிலர் கொலை செய்ய முயற்சி செய்துள்ளது தெரியவந்தது. அகமது மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்னையில் ஏற்பட்ட முன்பகையா? அல்லது சொத்துக்காக அகமதுவை யாராவது கொலை செய்ய முயற்சி செய்தார்களா? டெண்டர் எடுப்பதில் ஏற்பட்ட தொழில் போட்டியா? கடன் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: