ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் விவசாய நிலம் சேதம்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்த மேலகண்டமங்கலத்தில் ஓஎன்ஜிசி சார்பில் பிளாண்ட் அமைத்து கச்சா எண்ணெய் மற்றும் காஸ் எடுக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அங்கிருந்து நல்லூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுக்கப்படும் கச்சா எண்ணெய், காஸ் அனுப்புவதற்காக கமலாபுரம் வழியாக பூமிக்கடியில் 6 அடி ஆழத்தில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. நல்லூரில் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு அதிலிருந்து பிரிக்கப்படும் காஸ் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமக்கோட்டை அரசு பவர் பிளாண்டுக்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் வழியாக அனுப்பப்பட்டு காஸ் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஓஎன்ஜிசி சார்பில் குழாய்கள் அமைக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் விவசாய  நிலங்களாகும்.

இந்நிலையில் கோட்டூர் அடுத்த கமலாபுரத்தில் கருப்பு கிளார் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(60) என்பவருக்கு சொந்தமான வயலுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் மற்றும் காஸ் வெளியேறி நிலத்தில் நேற்று பரவியது. இந்த தகவலறிந்த மன்னார்குடி ஆர்டிஓ அழகர்சாமி, தாசில்தார் ஜீவானந்தம் மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து குழாய் வெடிப்பை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் பாதிக்கப்பட்ட 3 விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். சேதமடைந்த வயல்களை சீரமைத்து தரப்படும் என்று ஓஎன்ஜிசி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து உடைந்த கச்சா எண்ணெய் குழாயை சீரமைக்கும் பணியில் ஓஎன்ஜிசி பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: