அழகர்கோவில் பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்

அழகர்கோவில்: மதுரையை அடுத்த 108 வைணவ திவ்விய தேசங்களுள் ஒன்றான திருமாலிஞ்சோலை என்று அழைக்ககூடிய அழகர்கோவில் பல்வேறு சிறப்புகளை உடையது. அந்த வகையில் அழகர்கோவில் பகுதியில் பாரம்பரியமாக மண்பானைகள் தயாரிக்கும் பணி காலம் காலமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அழகர்கோவில் அருகே உள்ள சுந்தர்ராஜன்பட்டியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தயாரிக்கும் மண்பானைகள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி சோனைசாமி கூறுகையில், ‘இந்த பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. நான் கடந்த  65 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

கண்மாயில் மண் எடுத்த பிறகு காயவைத்து பக்குவபடுத்தி பல்வேறு நிலைகளை கடந்து பானை செய்கிறோம். ஒரு பானை செய்ய 4 நாட்கள் ஆகும். தற்போது வெயில் காலம் என்பதால் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் மண் பானைகள் கோயம்புத்தூர், திருச்சி, சிவகங்கை, தேவகோட்டை போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு மொத்தமாக வாங்கி செல்கின்றனர். தற்போது வெயில் காலம் என்பதால் ஆர்டர் செய்தால் 14 முதல் 16 நாட்களில் பானை செய்து கொடுத்து விடுவோம். சுட்டெரிக்கும் வெயில் சீசன் தற்போது தொடங்கி விட்டதால், மண் பானைகளின் தேவை தற்போது அதிகமாக இருப்பதால் விற்பனை நன்றாக உள்ளது. மழை காலங்களில் அரசு எங்களுக்கு ஐந்தாயிரம் நிவாரணமாக வழங்குகிறது. இதனை உயர்த்தி வழங்க வேண்டும்’ என்றார்.

Related Stories: