சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து  தண்ணீர் திறப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட கண்மாய்களில் தண்ணீர்தேக்கி வைக்கும் வகையில் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆற்றில் 8 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் போதுமான இருப்பு உள்ளது. இந்த ஆண்டு முதல்போக பாசனத்திற்காக வருகிற ஜூன் 2ம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் நீரை நிரப்பி வைக்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அணையில் இருந்து, சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.இன்று காலை 7.15 மணிக்கு வைகை அணையில் இருந்து 7 பிரதான மதகுகள் மூலம் ஆற்றுப்படுகை வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன் தலைமையிலான அதிகாரிகள் தண்ணீரை திறந்து வைத்து, பூக்கள் தூவினர். நிகழ்ச்சியில் வைகை அணை உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் குபேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பகுதி 1 மற்றும் பகுதி 2ல் உள்ள கண்மாய்களுக்கு இன்று முதல் வருகிற 28ம் தேதி வரையில் 5 நாட்களுக்கு 582 மில்லியன் கன அடி தண்ணீரும், பகுதி 3ல் உள்ள கண்மாய்களுக்கு 29ம் தேதி முதல் 1ம் தேதி வரை 3 நாட்களுக்கு 267 மில்லியன் கனஅடி தண்ணீரும், இரண்டு கட்டமாக மொத்தமாக 849 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.இந்த தண்ணீரின் மூலம் சிவகங்கை மாவட்டம், வைகை பூர்வீக பாசன பகுதி 1, 2 மற்றும் 3ல் உள்ள மொத்தம் 118 கண்மாய்களில் நீரை தேக்கி வைக்க முடியும்.

இதன் மூலம் அந்த கண்மாய்களை சுற்றியுள்ள சுமார் 47 ஆயிரத்து 929 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தவிர வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளில் தண்ணீர் பெருக்கும் வகையில் நிலத்தடி நீரும் உயரும் என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதற்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 7 நாட்களுக்கு 1,093 மில்லியன் கன அடி நீரும், சிவகங்கை மாவட்டத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் 6 நாட்களுக்கு 449 மில்லியன் கனஅடி நீரும், மதுரை மாவட்டத்திற்கு டிசம்பர் மாதம் 5 நாட்களுக்கு 250 மில்லியன் கனஅடி நீரும் ஆற்றுப்படுகை வழியாக திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: