ரஷ்யாவின் போர் குறியீடாக இருக்கும் ‘இசட், வி’ எழுத்துகளை பயன்படுத்த தடை; உக்ரைன் நாடாளுமன்றத்தில் புது சட்டம்

கீவ்: ரஷ்யாவின் போர் குறியீடாக இருக்கும் ‘இசட், வி’ ஆகிய எழுத்துகளை பயன்படுத்த தடை விதித்து உக்ரைன் நாடாளுமன்றத்தில் புது சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,  உக்ரைன் நாடாளுமன்றம் கூடியது. அப்போது, மேலும் 90 நாட்களுக்கு அல்லது  ஆகஸ்ட் 23ம் தேதி வரை நாட்டில் ராணுவச் சட்டம் அமலில் இருக்கும் என்று  அறிவிக்கப்பட்டது.

மேலும், ரஷ்யப் படைகள் போர் குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த ‘இசட் மற்றும் வி’ ஆகிய எழுத்துகளை உக்ரைன் மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதற்கு 423 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், 313 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அதிபர் ஜெலென்ஸ்கி பேசுகையில், ‘ரஷ்யப் படைகள் பயன்படுத்தும் குறியீட்டு எழுத்துகளான ‘இசட், வி’ ஆகியவற்றை அருங்காட்சியகங்கள், நூலகங்கள், அறிவியல் படைப்புகள், பாடப்புத்தகங்கள் ஆகியவற்றில் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

மற்ற இடங்களில் மேற்கண்ட இரு எழுத்துகளும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் ராணுவ வாகனங்கள் மற்றும் உபகரணங்களில் ‘இசட், வி’ எழுத்துகள் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றன. இவை, உக்ரைனுக்கு எதிரான எழுத்துகளாக பார்க்கப்படுகிறது. இந்த எழுத்துகள் உக்ரைனின் இறையாண்மையை குறைத்து மதிப்பிடும் வகையில் உள்ளது’ என்று கூறினார்.

Related Stories: