திருச்சியில் பரபரப்பு!!! காதலிக்க மறுத்ததால் மாணவிக்கு விஷ குளிர்பானம்: இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல்

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நொச்சி வயல் புத்தூரைச் சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி. இவர் தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில் கடந்த 12-ம் தேதி தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட மர்மக்கும்பல் ஒன்று, விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவியை கட்டாயப்படுத்தி அருந்த வைத்துள்ளனர். இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது தாயார் சாந்தி பெல் காவல் நிலையத்தில் கடந்த 18-ம் தேதி புகார் அளித்தார்.

போலீசாரிடம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறுகையில், இளைஞர் ஒருவர் தன்னை காதலிப்பதாக கூறினார் என்றும், அதற்கு தான் மறுத்ததால், அந்த இளைஞர் மேலும் 2 பேருடன் வந்து, கட்டாயப்படுத்தி விஷம் கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்தனர் என்றும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் பெல் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மர்மநபர்கள் பற்றி விசாரணை நடத்தினர். இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி வித்யா, சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் மாணவியின் இறப்புக்கு காரணமான 3 நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக பெல் போலீசாரை கண்டித்து, உடலை வாங்க மறுத்து திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மலைக்கோயில் பகுதியில் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். பின்னர், மாணவியின் உறவினர்களிடம் போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தால், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: