×

ஹேப்பி தரும் ஹேண்ட் மேட் கிரீட்டிங்ஸ்!

இன்று 60களில் இருப்பவர்கள் தங்களது 20வது வயதுகளில் நிகழ்ந்த சம்பவங்களை அசை போட்டால், வாழ்த்து அட்டைகள் அதில் தவிர்க்க முடியாமல் இடம் பெற்றிருக்கும். கம்ப்யூட்டர், கிராபிக்ஸ் அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் மக்களின் தினசரி நடவடிக்கையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட, கிரீட்டிங் கார்டு எனப்படும் வாழ்த்து அட்டையின் தாக்கம் சுத்தமாக மறைந்துவிட்டது. ஒரு காலத்தில், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், புத்தாண்டு போன்றவை முடிந்ததும் தபால்காரர் வரவுக்காக வீட்டு வாசலில் ஒற்றைக்காலில் காலை 9.00 மணிக்கு தவமிருப்பார்கள். தபால்காரரின் சைக்கிள் பெல் சத்தம் கேட்டவுடன் அவரிடம் சென்று வீட்டு எண்ணை குறிப்பிட்டு தபால் வந்துள்ளதா என்று ஆர்வம் பொங்க கேட்பார்கள்.

அந்த தபாலின் விசேஷம் வேறு ஒன்றுமில்லை... வாழ்த்து அட்டைகள் தான். பண்டிகை லீவு முடிந்து, பள்ளிக்கு செல்லும் மாணவ  மாணவிகள் தங்களுக்கு யாரிடமிருந்து எல்லாம் வாழ்த்து கடிதம் வந்தது என்று ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்வது வழக்கம். அதே போல் அந்த கிரீட்டிங் கார்டு களை வாங்குவது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். ஆனால் நவீன யுகத்தில் வாழ்த்துகளை வலைத்தளங்களில் நொடிப்பொழுதில் மற்றவர்களுக்கு ஷேர் செய்கிறார்கள். இதில் பாதி பேர் அதை பார்ப்பதும் இல்லை. சிலர் எத்தனை பேருக்கு திரும்ப வாழ்த்து தெரிவிப்பதுன்னு சலித்துக் கொள்கிறார்கள். வலைத்தளங்களை பொருத்தவரை ஒருவர் அனுப்பிய அதே வாழ்த்துக்களை நாம் பலருக்கு ஃபார்வேர்ட் செய்கிறோம். இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்.

வாழ்த்து மட்டுமில்லை, செய்திகளும் இவ்வாறு தான் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதில் பாதி செய்திகள் பழைய நிகழ்வுகளாகத் தான் உள்ளது. ஆனால், அந்தக் கால வாழ்த்து அட்டையின் சுவாரசியம், நா வறண்டு பாலைவனத்தில் திரிபவனுக்கு தண்ணீர் கிடைத்தால் ஏற்படும் உற்சாகத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு மேலானது. தன் மனதுக்குப் பிடித்தவர் அனுப்பிய வாழ்த்து அட்டையில், பொதிந்துள்ள வார்த்தைகளை மீண்டும், மீண்டும் படிக்கும் போது ஏற்படும் பரவசம், திகட்டாத அனுபவத்தை கொடுக்கும். அப்படிப்பட்ட அந்த வாழ்த்து அட்டைகளை மீண்டும் அடையாளம் ஏற்படுத்தி வருகிறார் கிறிஸ்டினா. இவர் தன்னுடைய பெயரில் ஆர்ட் ஸ்டுடியோ ஒன்றை அமைத்து நிர்வகித்து வருகிறார்.

ஹேண்ட் மேடு வாழ்த்து அட்டைகள் புத்துணர்ச்சி அளிப்பதாக அடித்து கூறும் கிறிஸ்டினாவின் தயாரிப்பில் உருவாகும் வாழ்த்து அட்டைகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறினார். ‘‘ஒவ்வொருவரின் விருப்பத்திற்கும் உகந்த வகையில் வாழ்த்து அட்டை தயாரிப்பதால், என் கலைக்கூடம் முழுதும், வண்ண வண்ண கிராஃப்ட் பேப்பர்கள் மட்டுமில்லாமல், ஆர்ட், லித்தோ, டியூப்ளக்ஸ் என பல ரக பேப்பர்களில் வாழ்த்து அட்டைகளை கைகளால் தயாரிக்கிறோம். அதை மேலும் அழகுப்படுத்த வண்ணங்கள், பெயின்ட் மற்றும் கிளிட்டர்கள் பயன்படுத்துகிறோம்.

வாழ்த்து அட்டைகள் மீண்டும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்க வேண்டும்’’ என பரவசப்படும் கிறிஸ்டினா, கொரோனா லாக்டவுனின் போது, மன அழுத்தத்தில் இருந்து விடுபட பல ஐ.டி ஊழியர்கள் வாழ்த்து அட்டை தயாரிப்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். ‘‘ஒரு வாழ்த்து அட்டை உருவாக்கும் முன்பு அதை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும். எந்த வாசகம் யாருக்கு பொருந்தும் என யோசிக்கும்போது சிந்தனை வலுப்பெறும், குழப்பங்கள் நீங்கும், விதவிதமான கலர்களை பயன்படுத்தும் போது மனதுக்குள் ஒரு வித மகிழ்ச்சி பூப்பூக்கும். மனம் செழிப்பாக இருந்தால் பணம் சம்பாதிக்க ஆயிரம் ஐடியா கிடைக்கும்’’ எனக் கூறும் கிறிஸ்டினா, கிரீட்டிங் கார்ட் தயாரிக்க முதலாக 500 ரூபாய் செலவழித்தால் கணிசமான லாபம் பார்க்கலாம் என்கிறார்.

‘‘வாழ்த்து அட்டைகளுக்கான பேப்பர்கள், பெயின்ட் ரகங்களை தரமாக தேர்வு செய்ய வேண்டும். மேலும் வாழ்த்து அட்டையில் உள்ள வாசகம் மூலம் எவ்வாறு ஒருவரை ஈர்க்கலாம்... ேபான்ற சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும், வருமானம் கிடைக்கும். வீட்டில் சும்மா இருக்கிறோம் என்று நினைக்கும் பெண்களுக்கு இது பலனாக அமையும். மேலும், மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும். வாழ்த்து அட்டைகள் முதன் முதலில் சீனாவில் தான் உருவானது.

மெல்லிய பருத்தி மற்றும் பட்டுத் துணிகளில் ஓவியங்களை தீட்டி சீன புத்தாண்டை வரவேற்க வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டுள்ளனர். காகிதம் கண்டுபிடித்த பின்னர் அதில் வாழ்த்து அட்டைகளை தயாரித்ததில் முன்னோடிகள் எகிப்தியர். நானூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பியாவில் காதலர் தினத்தை கொண்டாட கிரீட்டிங் கார்டு பரிமாற்றம் தொடங்கியுள்ளது. அதுவே பின்னர் அனைத்து நாடுகளுக்கும் பரவியது’’ என வாழ்த்து அட்டைகளின் வரலாற்றை விவரித்தார் கிறிஸ்டினா.

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!