விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு!: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி..!!

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 806 பக்க குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி டி.எஸ்.பி. தாக்கல் செய்தார். விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத்அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேர் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 8 பேரில் 4 பேர் சிறார்கள் என்பதால் விருதுநகர் இளையோர் நீதிக்குழுமம் ஜாமீனில் விடுவித்தது.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, ஹரிகரன் உட்பட 4 பேரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்தனர். பெற்றோர், உறவினர், நண்பன் உள்பட மொத்தம் 120 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் 4 பேரும் அடைக்கப்பட்டனர். ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய நால்வருக்கும் நீதிமன்ற காவல் முடிந்து சிபிசிஐடி போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நால்வரையும் மீண்டும் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த பொறுப்பு நீதிபதி காந்தகுமார் வரும் 30ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து மீண்டும் மதுரை மத்திய சிறையில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 806 பக்க குற்றப்பத்திரிகை ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறார்கள் 4 பேருக்கு எதிராக 240 பக்க குற்றப்பத்திரிகை விருதுநகர் இளையோர் நீதிக்குழுமத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.

Related Stories: