விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த மதுவை போட்டிபோட்டு அள்ளிச்சென்ற குடிமகன்கள்: உறவினர்கள், நண்பர்களையும் வரவழைத்து உற்சாகம்

திருமலை: விபத்தில் சிக்கிய லாரியில் ஏற்றி வந்த பீர் பாட்டில்கள் சாலையில் சிதறியது. இதையறிந்த குடிமகன்கள் போட்டிபோட்டு அள்ளிச் சென்றனர். மேலும் சிலர் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உற்சாகமடைந்தனர்.

ஆந்திர மாநிலம், காகுளத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று சென்றது. பிரகாசம் மாவட்டம் சிங்கரயகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பீர் பாட்டில்கள் சாலையில் சிதறியது.

இதுபற்றிய தகவல் அப்பகுதி மக்களிடையே பரவியது. இதையடுத்து குடிமகன்கள் ஏராளமானோர் அங்கு ஓடி வந்து பீர் பாட்டில்களை அள்ளினர். மேலும் சிலர் அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கும் போன் மூலம் தகவல் கொடுத்தனர். அவர்களும் அங்கு திரண்டு போட்டி போட்டு பீர் பாட்டில்களை அள்ளி பைகளிலும் தாங்கள் அணிந்திருந்த லுங்கி, வேட்டி, சட்டையிலும் எடுத்துக்கொண்டு ஓடினர். அருகே வசிக்கும் ஒருசிலர் பீர் பாட்டில்களை வீட்டில் வைத்துவிட்டு வந்து மீண்டும் மீண்டும் எடுத்துச்சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் பானமான பீர் கிடைத்தது குடிமகன்களை மிகுந்த மகிழ்ச்சி அடைய செய்தது.

விபத்தில் சிக்கிய லாரியில் மொத்தம் ₹4 லட்சம் மதிப்புள்ள பீர் பாட்டில்களை குடிமகன்கள் அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார் சாலையில் உடைந்தும், சிதறிக்கிடந்த பீர் பாட்டில்களையும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சாலையோர கால்வாயில் கொட்டினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: