கணவருடன் சென்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் கள்ளக்காதலியை கொன்ற கள்ளக்காதலன்: தடுக்க முயன்ற அண்ணனும் பலி

ஸ்ரீ காளஹஸ்தி: கணவருடன் சென்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் கள்ளக்காதலியையும், தடுக்க முயன்ற அவரது அண்ணனையும் கருங்கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம் எனுமுலவாரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணா, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி. இவரது தங்கை ராதாராணி(28). இதே கிராமத்தை சேர்ந்த நரசிம்மலு என்பவரோடு ராதாராணிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாய்செய்த்து (6) என்ற மகள் உள்ளார். தம்பதி இருவரும் வெளியூர்களுக்கு சென்று காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை விற்று குடும்பம் நடத்தி வந்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்கல்லு கிராமத்திற்கு சென்றனர். அங்கு வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமு என்பவருக்கும் ராதாராணிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நரசிம்மலுவை கைவிட்ட ராதாராணி ராமுவுடன் சேர்ந்து தனி வீட்டில் வசித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் திருப்பதி மாவட்டம், ஜான்ட்ரப்பேட்ைடக்கு சென்றனர். அங்குள்ள வாட்டர் பிளாண்ட்டில் ராதாராணி, ராமு, ராதாராணியின் சகோதரர் வெங்கட்ரமணா ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர்.

தனியாக தவித்த நரசிம்மலு, ஜான்ட்ராபேட்டைக்கு சென்று அங்கு தனது மனைவி ராதாராணியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ராதாராணி, எந்த பதிலும் சொல்லவில்லையாம். இதற்கிடையில், ராதாராணி அவரது கணவருடன் சென்று விடுவாரோ என்ற சந்தேகம் ராமுவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமுவுக்கும் ராதாராணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ராமு அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்துவிட்டு வந்து ராதாராணியுடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ராமு, அங்குள்ள கருங்கல்லை எடுத்து ராதாராணி மீது போட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை தடுக்க சென்ற வெங்கட்ரமணாவையும் ராமு கருங்கல்லால் தாக்கியுள்ளார்.  இதில் அவரும் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சவுடேப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பீளேர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ராமுவை தேடி வருகின்றனர்.

Related Stories: