ஒரு ஆதரவாளர் கூட கிடைக்காமல் ஓபிஎஸ் திண்டாட்டம்; ராஜ்யசபா அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் தொடர் இழுபறி: எடப்பாடி பழனிச்சாமி திடீர் கெடு

சென்னை: அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் கடும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. தன்னுடைய கோட்டாவில் ஒரு ஆதரவாளர் கூட கிடைக்காமல் இருப்பதால் பட்டியலை இறுதி செய்ய முடியாமல் பன்னீர்செல்வம் திணறி வருகிறார். இதனால் பட்டியலை வழங்கும்படி அவருக்கு எடப்பாடி பழனிச்சாமியும் கெடு விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரது பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிகிறது. இதனால் ராஜ்யசபா தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய எம்எல்ஏக்களின் விகிதாச்சாரப்படி திமுகவுக்கு 4 எம்பிக்களும், அதிமுகவுக்கு 2 எம்பிக்களும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதில் திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரசுக்கு ஒரு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் 2 சீட்டுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் இரட்டை தலைமை உள்ளதால் ஆளுக்கு ஒரு சீட் வேண்டும் என்று இருவரும் கேட்டுக் கொண்டதால், கடந்த வாரம் அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் எடப்பாடி ஆதரவாளர்கள்தான் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதனால் கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோரை அறிவிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கூட்டம் தொடங்கியவுடன் கருத்துக்களை கூறலாம் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார்.

ஆனால் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஜெ.சி.டி.பிரபாகர் எழுந்து, நாங்கள் எல்லோருமே சீட் கேட்டுள்ளோம். எங்களிடம் கருத்துக்கள் கேட்டால் நன்றாக இருக்காது. தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகிய 4 பேர் கூடிப் பேசி 2 வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றார். இதனால் 4 பேரும் தனி அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது, எடுத்தவுடன் 2 வேட்பாளர்களை நீங்கள் தயாராக வைத்துள்ளீர்கள். அதன்படி ஜெயக்குமார், சி.வி.சண்முகத்தை அறிவித்தால் நான் கையெழுத்துப் போட மாட்டேன் என்றார் ஓபிஎஸ். உடனே எங்களிடம் அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று எடப்பாடி கை விரித்து விட்டார். மேலும் நீங்களே ஒருவரை அறிவியுங்கள் என்றவுடன், பன்னீர்செல்வம் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் சரி நீங்கள் சொன்னபடி ஒரு சீட் கொடுக்கிறோம். வேட்பாளரை சொல்லுங்கள் என்றவுடன் பின்னர் அறிவிக்கிறேன் என்று கூறினார். இதனால் கூட்டம் முடிந்தது.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பாக ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ் சத்தியனுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்குலத்தோர் சமுதாயத் தலைவர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் சந்தித்து கையெழுத்துப் போட்டுக் கடிதம் கொடுத்தனர். இதை வைத்துத்தான் பன்னீர்செல்வம் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்றார். இந்த திட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவிப்பார். அதை வைத்து தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாய தலைவர்களை தன் பக்கம் இழுக்கலாம் என்று பன்னீர்செல்வம் திட்டமிட்டார். ஆனால் எடப்பாடிபழனிச்சாமியோ, தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கலாம் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார். அதற்கு காரணம், தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் எல்லோரும் எடப்பாடியின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

இதனால் நாம் நினைத்தது ஒன்று, நடந்தது வேறு என்று பன்னீர்செல்வம் தனது கோட்டாவுக்கான வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளார். இதனால் ஓரிரு நாளில் வேட்பாளரை அறிவிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளதால் உடனடியாக பட்டியலை வழங்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.

அதன்படி தென் மாவட்டத்தில் யாரை அறிவித்தாலும் அது தன்னுடைய ஆதரவாளராகத்தான் இருக்கும். வட மாவட்டத்தில் 2 பேர் உள்ளனர். அதில் ஜெயக்குமார், சி.வி.சண்முகம். அதில் இருவரில் ஒருவரை அறிவிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். அதன்படி சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக கடலூர், விழுப்புரம், வேலூர் என 6 மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் என 60 பேர் கையெழுத்துப் போட்டு ஆதரவு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் ஜெயக்குமாருக்கு ஆதரவாக யாரும் கடிதம் கொடுக்கவில்லை.

இதனால் யாரை அறிவிப்பது என்று எடப்பாடி குழப்பத்தில் உள்ளார். அதேநேரத்தில் இருவரில் ஒருவருக்கு சீட் வழங்க முடிவு செய்துள்ளதால் மற்றொருவரை சமாதானப்படுத்தும் வேலைகள் தீவிரமாகியுள்ளன. இதனால் ஓரிரு நாளில் வேட்பாளரை அறிவிக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதால், அதிமுகவில் பூகம்பம் வெடிக்கும் என்று மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

Related Stories: