திருத்தணி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில்; முன்பதிவு செய்த பெட்டிகளில் லோக்கல் பயணிகளுக்கு அனுமதி வழங்கவேண்டும்: ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை

திருத்தணி: ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் பெரும்பாலும் ரயில், பஸ்கள் மூலம் வருகை தருகின்றனர். ஆனால் திருத்தணி ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் தவிர ஒரு சில எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் திருத்தணியில் நின்று செல்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், திருத்தணி ரயில் நிலையத்தில் இறங்கி செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதுதவிர, திருத்தணி நகரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார், அரசு கம்பெனி தொழிலாளர்கள் தினமும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி வழியாக திருத்தணி-அரக்கோணம் சென்னைக்கு கருடாத்ரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மூலம் திருத்தணியில் இருந்து 500க்கும் மேற்பட்ட பயணிக்கின்றனர். கர்ப்பிணிகள், வயதானவர்களும் இந்த ரயிலை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயிலில் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் இரண்டு பெட்டிகள் மட்டுமே டிக்கெட் பதிவு இல்லாத பயணிகள் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பெட்டியில் பதிவுசெய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நாள்தோறும் திருத்தணியில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு பதிவு இல்லாத பெட்டியில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். முன்பதிவு செய்த பெட்டியில் ஏறினால் கூட நிற்பதற்கு இடமின்றி சிரமப்படுகின்றனர்.

‘திருத்தணி நகரம் வழியாக செல்லும் கருடாத்ரி உள்பட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முன்பதிவு பெட்டிகளில் லோக்கல் பயணிகள் ஏறுவதற்கு ஏற்பாடு செய்ய ரயில்வே நிர்வாகம், தமிழக அரசு நடவடிக்ைக எடுக்கவேண்டும்’’ என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: