மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் பயணம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனி விமானம் மூலம் சேலம் செல்கிறார். அவருக்கு ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாளை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வர் தண்ணீர் திறந்து வைக்கிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டி விட்டது. இதையடுத்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக நாளை (24ம் தேதி) தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தண்ணீர் திறந்து வைக்கிறார்.

இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் செல்கிறார். அங்கு அவருக்கு சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப் படுகிறது. பின்னர் கார் மூலம் ேமட்டூருக்கு செல்லும் முதல்வருக்கு சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் தீவட்டிப்பட்டியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக்கொள்கிறார்.

பின்னர் தொப்பூர் வழியாக மேச்சேரி செல்லும் முதல்வருக்கு மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கபடுகிறது. இதற்காக மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பின்னர் முதல்வர் மேட்டூருக்கு செல்கிறார். அங்கு இரவு ஓய்வெடுக்கிறார்.

நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு மேட்டூர் அணைக்கு சென்று காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார். பின்னர், அங்கிருந்து குஞ்சாண்டியூர், நங்கவள்ளி, இரும்பாலை, சேசோ சர்வ், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன் பட்டி வழியாக வாழப்பாடிக்கு செல்கிறார். அங்கு கிழக்கு மாவட்ட திமுக ெபாறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து, ஆத்தூர் அருகேயுள்ள செல்லியம்பாளையத்தில் மதியம் 2 மணிக்கு, தமிழக அரசின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

Related Stories: