ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்பாக சூதாட்டம் நடத்திய 9 பேர் கைது; டெல்லி போலீசார் அதிரடி

புதுடெல்லி: ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்பாக சூதாட்டம் நடத்திய 9 பேரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி, வீரர்கள் வெற்றி - தோல்வி அடைவார்கள் என்பது குறித்து சூதாட்டம் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. தலைநகர் ெடல்லியின் குறிப்பிட்ட பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சமீர் சர்மா கூறுகையில், ‘சந்தர் விஹார், நிஹால் விஹார் போன்ற இடங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்தப் பகுதிகளை சுற்றிவளைத்து சோதனை நடத்தினோம். ஒரு இடத்தில் ஆறு பேரும், மற்றொரு இடத்தில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 2 மடிக்கணினிகள், 3 இன்டர்நெட் ரூட்டர்கள், எல்இடி டிவிக்கள், குரல் பதிவு கருவிகள், அழைப்பு ஒலிவாங்கிகள், ரூ.74,740 ரொக்கம், 10 செல்போன்கள், சூதாட்ட பதிவுகள் தொடர்பான 2 நோட்டுகள், ஐந்து மொபைல் போன்கள் இருந்த சூட்கேஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். நிஹால் விஹார் காவல் நிலையத்தில் சூதாட்ட சட்டத்தின் பிரிவு 3, 4, 9 மற்றும் 55-இன் கீழ் அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: