மின் மோட்டார் கேபிள் திருட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான மின்மோட்டார் காப்பர் ஒயர்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றதை கண்டித்து கிராம மக்கள் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள ரங்கப்பனூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஊராட்சி சார்பில் கிணறுகள் அமைத்து மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பம்ப் ஆபரேட்டர்கள் அங்குள்ள மோட்டாரை ஆன் செய்ய வந்த போது 3 கிணறுகளில் உள்ள நீர்மூழ்கி மோட்டார்களுடன் இணைக்கப்பட்டிருந்த காப்பர் ஒயர்களை யாரோ மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச்சென்றது தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சங்கராபுரம்-சேராப்பட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜ், வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும் போது, எங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய பயன்பட்டு வந்த மின் மோட்டார்களின் காப்பர் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

எனவே அவற்றை மீட்டுத்தர வேண்டும், மாற்று கேபிள் பொருத்தி குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜ் உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக சங்கராபுரம்-சேராப்பட்டு சாலையில் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: