கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் மலர் கண்காட்சி நாளை துவக்கம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் மலர் கண்காட்சி நாளை துவங்குவதால், சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வரத் துவங்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் களைகட்டியுள்ளது. இந்தாண்டு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி விழா நாளை (மே 24) தொடங்குகின்றது.

இதனால் கொடைக்கானலை நோக்கி அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். நேற்று வார விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கொடைக்கானல் திணறியது.கொடைக்கானல் ஏரி பகுதியை சுற்றியுள்ள சாலையில் பேரிகார்டு அமைத்து கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி நடந்து சென்று இயற்கையை ரசித்தனர்.

 மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஏரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மலர் கண்காட்சி நாளை துவக்கம்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா நாளை (மே 24) முதல் ஜூன் 2ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் மே 29ம் தேதி வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சியும், ஜூன் 2ம் தேதி வரை சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழாவும் நடைபெற உள்ளன. இதன் துவக்க விழா நாளை காலை 11 மணிக்கு கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெறவுள்ளது. விழாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர்காட்சியினையும், அமைச்சர் அர.சக்கரபாணி கண்காட்சி அரங்கையும், அமைச்சர் மா.மதிவேந்தன் கலை நிகழ்ச்சிகளையும் துவக்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளனர். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் முன்னிலை வகிக்க எம்எல்ஏக்கள் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related Stories: