கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டில் பயன்படுத்திய இரும்பு கட்டில்கள் திறந்தவெளியில் வீச்சு- மறு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா?

நாகர்கோவில் : நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வார்டு அமைத்தபோது பயன்படுத்தப்பட்ட இரும்பு கட்டில்கள் பயன்பாடற்று குப்பைகளாக மாறி வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  இரண்டு அலைகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது.  இரண்டாவது அலை வேகம் பிடித்த நிலையில்  தமிழக அரசு விதித்த கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டன. இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வந்தது. மேலும்  முக கவசம் அணியாமல் வெளியே நடமாடியவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு குமரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி தவிர பல்வேறு இடங்களிலும் சிகிச்சை மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டது. அங்கு மாநகர் நல அதிகாரி விஜயசந்திரன் மேற்பார்வையில் 200 படுக்கைகள் போடப்பட்டன.

குமரி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இரண்டாவது அலையின்போது பெருமளவில் நோயாளிகள் இங்கு தங்க வைக்கப்படவில்லை. இருப்பினும் படுக்கை வசதிகளுடன் வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் ெகாரோனா வார்டு தயார் செய்ய கொண்டுவரப்பட்ட கட்டில்கள் மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படாமல் ஆங்காங்கே தேங்கியுள்ளன.

கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இவ்வாறு மையம் அமைக்க கொண்டுவரப்பட்ட இரும்பு கட்டில்கள் தற்போது குப்பையாக மாறியுள்ளன.

இவை அனைத்தும் கல்லூரி வளாகத்தில் திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பயன்பாட்டிற்கு உகந்த நிலையில் உள்ள பொருட்கள் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து இவை சேதமடைந்து வருகின்றன. இதனை உரிய காலத்தில் பயன்படுத்திடவும், உரிய முறையில் மறு பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: