திருச்சுழி பெரிய கண்மாயை ஆக்கிரமித்த கருவேலம் மரங்கள் விவசாயத்திற்கு போடுது முட்டுக்கட்டை-தூர்வார விவசாயிகள் கோரிக்கை

திருச்சுழி : திருச்சுழி பெரிய கண்மாய் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் ஐந்து மடைகளை கொண்டு அமைந்துள்ளது. இக்கண்மாய்க்கு மழைக்காலங்களில் குண்டாறில் நீர் வரும் போது கால்வாய் மூலம் பந்தனேந்தல் உள்ள கண்மாயில் நீர் நிரம்பும். அதன் பின்பு உபரிநீராக, வரத்து கால்வாய் மூலம் திருச்சுழி பெரிய கண்மாய்க்கு நீர் வந்து சேரும். வரத்து கால்வாய் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தூர்ந்து போனதால் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பில்லாமல் போனது.

இதன்விளைவாக பெரிய கண்மாயில் முழுவதும் கருவேலம் மரங்கள் வளர்ந்தும், கண்மாய்களில் இருந்த மடைகளும் பராமரிக்கபடாமல் கிடப்பில் போடப்பட்டன. இந்த கண்மாய் உரிய முறையில் தூர்வாரி பராமரிக்கப்படாததால் திருச்சுழி, பச்சேரி, தமிழ்பாடி ஆகிய 3 கிராம விவசாயிகள், சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை தரிசு நிலங்களாக போட்டு வந்தனர்.

இந்நிலையில், ரூ. 10 கோடியே 46 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வரும் தடுப்பணை பணிகள் முடிவு பெறும் தருவாயில் உள்ளது.

இதனால், திருச்சுழி கண்மாய்க்கு வரக்கூடிய குண்டாற்று நீர் அடைக்கப்பட்டு நேரடியாக குண்டாற்றில் மழைநீர் சென்றது. இதனால் திருச்சுழி கண்மாய் ஓரளவிற்கு நீர் நிரம்பியது. ஆகையால் தற்போது புதியதாக கட்டப்பட்ட தடுப்பணையிலிருந்து பந்தனேந்தல் கண்மாய் வரை கால்வாயை அகலப்படுத்தி, கரையை உயர்த்தி திருச்சுழி கண்மாய்க்கு மழைநீர் கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொது பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்: பந்தனேந்தல் பகுதியில் தடுப்பணை பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. வருகின்ற பருவமழை பெய்யும்போது குண்டாற்று நீரை திருச்சுழி கண்மாய்க்கு நீரை திருப்பிவிட தயார் நிலையுள்ளதாக கூறினார்.

Related Stories: