சுற்றுவட்டாரத்தில் பரவலான மழையால் மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைந்தது-கூடுதல் விலைக்கு விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி தினசரி மார்க்கெட்டின் ஒருபகுதியில் வாரத்தில் புதன் மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் விற்பனை நடைபெறுகிறது. சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி பழனி,ஒட்டன்சத்திரம்,தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாழைத்தார் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவற்றில் பெரும்பான்மையான வாழைத்தார்கள் கேரள மாநில பகுதிக்கே விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வாழைத்தார் வரத்தினை பொறுத்து, ஏலத்தில் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதில் கடந்த ஏப்ரல் மாதம் மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக, அவ்வப்போது பலத்த காற்றுடன் பெய்த மழையால், வாழை அறுவடை பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரம் ஏல நாட்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார் விற்பனைக்காக கொண்டு வரப்படும், ஆனால் நேற்று 300க்கும் குறைவான வாழைத்தார்களே வரபெற்றது.

இதில், வெளி மாவட்ட வாழைத்தார்களே அதிகமாக இருந்தது. வரத்து குறைவால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாழை ஒருகிலோ ரூ.50 வரையிலும், பூவந்தார் ஒருகிலோ ரூ.35 க்கும், மோரீஸ் ரூ.35க்கும், கேரள ரஸ்தாளி ரூ.45க்கும், நேந்திரன் ஒரு கிலோ ரூ.40க்கும் என, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: