தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து தேங்காய் விலை சரிவால் தென்னை விவசாயிகள் கவலை

பேராவூரணி : தஞ்சாவூர் மாவட்டத்தில் தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில், நெல்லுக்கு அடுத்தபடியாக டெல்டா விவசாயிகளின் 2வது மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்கிவரும் தென்னை சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியில் விளையும் தேங்காய்கள் அதன் அளவு, சுவை, மனம் போன்றவைகள் மூலம் பெயர் பெற்றுள்ளது.

இதன் காரணமாக சிறப்பு பெற்ற இப்பகுதி தேங்காய்கள், புகழ்பெற்ற பிஸ்கட் கம்பெனிகள், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் விரும்பி வாங்கிச்செல்வர்.

பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி பகுதியில் இருந்து மட்டும் நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாக சென்னை, காங்கேயம், வெள்ளக்கோயில் போன்ற பகுதிகளுக்கும், கர்நாடகா, ஆந்திரா, மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கும், விற்பனைக்காக தேங்காய்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம் . ஆனால் தற்போது ஏற்றுமதி நின்றுவிட்டது.

இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 20 ரூபாயாக குறைந்தது. ஆனால், தற்போது விற்பனையின்றி விலை சரிந்து 10 ரூபாய் முதல் 11 ரூபாயாக உள்ளது.

இதனால் தோப்பிலிருந்து பறிக்கப்பட்ட தேங்காய்களை விற்பனை செய்ய முடியாமலும், தோப்புகளிலும், தேங்காய்களை வெட்ட முடியாமல் மரங்களிலும் இருக்கிறது. இதனால் தென்னை விவசாயிகள் மட்டுமின்றி, தேங்காய் உரிக்கும் தொழிலாளிகள், தேங்காய் வெட்டும் தொழிலாளிகள், கொப்பரை காய வைப்போர் உட்பட பலரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து தென்னை விவசாயி ஆவணம்அடைக்கலம் கூறுகையில், ” தேங்காய் விலை ஒரேயடியாக 10 ரூபாய்க்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

100 தேங்காய்க்கு லாபக்காய் என 8 தேங்காயையும் வியாபாரிகள் கூடுதலாக வாங்கிக் கொள்கின்றனர். கடைசியில், ஒரு தேங்காய்க்கு விவசாயிகளுக்கு 9 ரூபாய் தான் கிடைக்கிறது. மொத்த வியாபாரிகள், ஆயில், சோப் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, விலையைக் குறைத்து நிர்ணயித்து, தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் செய்து விடுகின்றனர். ஒரு தேங்காயின் உற்பத்தி செலவே ரூ 7 வரை ஆகிறது. ஜவுளி பூங்கா போல, தென்னை பூங்கா அமைத்து தென்னை விவசாயத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். இப்பகுதி முன்னோடி தென்னை விவசாயிகளை அழைத்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்றார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில், விவசாயத்தைப் பாதுகாக்க சிறப்புக் கவனம் செலுத்தி வரும் தமிழக முதலமைச்சர், அதிக வருவாய், அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் தென்னை விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: