தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடை நிறைவடைந்து எள் செடிகள் காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடிக்கு பின்னர் பல பகுதிகளில் பயிரிடப்பட்ட எள் அறுவடைப்பணிகள் முடிந்து காயவைக்கப்பட்டு வருகிறது.

எள் அனைத்து வித மண்ணிலும் விளைச்சல் தரவல்லது. தமிழ்நாட்டில் அதிகப் பரப்பளவில் எள் சாகுபடி செய்ய முடியும். எள் பேக்கரி கடைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு எள் விதையை மணலுடன் கலந்து சீராக தூவி விதைத்தால் ஒரு கிலோ விதை போதுமானதாக இருக்கும்.

இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவாகும். எள்ளில், கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் என இரு வகைகள் உள்ளன.எள்ளை மானாவாரியாக பயிரிட ஆடி, கார்த்திகை மாதங்கள் சிறந்தவை. இறவைப் பயிராக பயிரிட மாசி மாதம் ஏற்றவை. மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் களிமண் போன்ற மண் வகைகள் ஏற்றவை. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் முடிந்த உடன் எள் தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது இந்த எள் அறுவடை செய்யப்பட்டு வெயிலில் காயவைக்கும் பணிகள் நடந்து வருகிறது; தற்போது வெப்பச்சலனத்தால் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் எள் அறுவடை செய்த விவசாயிகள் சிரமமடைந்து வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் எள் சாகுபடி முடிந்து தற்போது அறுவடை நடந்து அதனை திருவையாறு பைபாஸ் சாலையில் பல விவசாயிகள் காய வைத்து எள்ளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போதைய மழையால் காய்ந்த எள் செடிகள் மீண்டும் மழையில் நனைந்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: