அடிப்படை வசதிகள் முழுமையாக இருக்கிறதா? சேலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் வசதிகள் குழுவினர் ஆய்வு-கோட்ட அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

நாமக்கல் : சேலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் முழுமையாக இருக்கிறதா? என பயணிகள் வசதிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர். கோட்ட அதிகாரிகளுடன் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்துகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரியாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து, தேவையானவற்றை உடனுக்குடன் செய்திட அரசுக்கு பரிந்துரைக்க தேசிய அளவில் பயணிகள் வசதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக கிருஷ்ணதாஸ் உள்ளார். இக்குழுவின் உறுப்பினர்கள், தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களை கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு கடந்த 19ம் தேதி, பயணிகள் வசதிகள் குழு உறுப்பினர்களான ரவிச்சந்திரன், குட்லா உமாராணி, கைலாஷ் லட்சுமண வர்மா, திலிப்குமார் மாலிக், அம்ஜத் தாஸ் ஆகியோர் வந்தனர். இவர்கள், கடந்த 2 நாட்களாக ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் ஆய்வு நடத்தினர்.

நேற்று காலை கரூரில் தங்களது 3வது நாள் ஆய்வை தொடங்கினர். தொடர்ந்து, நாமக்கல், ராசிபுரம், சேலம் ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளின் வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனர். இந்த பயணிகள் வசதிகள் குழு உறுப்பினர்கள், இன்று (23ம் தேதி) கோட்ட அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்துகின்றனர். இதில், கோட்ட மேலாளர் கௌதம் னிவாஸ், கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

நேற்று நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை சுகாதார வசதிகள், பயணிகள் ஓய்வறை, மற்றும் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.பயணிகள் வருகை மற்றும் முன்பதிவு வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். ரயில் நிலைய அதிகாரிகள், குழுவினரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

Related Stories: