இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டம்? அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. பஞ்சாப் எல்லையையொட்டிய பகுதியில் ஆயுதங்கள் கடத்தல், போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் பரவலாக நடந்துள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை இலக்காக கொண்டு ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க நடத்திய சதி திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுபற்றி இந்திய உளவு அமைப்புகள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு, பஞ்சாப்பில் ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பெரிய அளவில் சதி திட்டம் தீட்டியுள்ளது. பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில், சரக்கு ரயில்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இதற்காக இந்தியாவில் உள்ள அந்த அமைப்புடன் தொடர்பிலுள்ள இயக்கங்களுக்கு அமைப்பு சார்ந்த நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய ஸ்லீப்பர் செல்களுக்கு பெரிய அளவில் பணம் வழங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது. ராணுவத்தின் முக்கிய தகவல்களை உளவு பார்த்து ஐ.எஸ்.ஐ.யுடன் பகிர்ந்து கொண்ட வழக்கில் பஞ்சாப் போலீசார் கடந்த புதன்கிழமை 2 பேரை கைது செய்திருந்தனர்.

அவர்கள் கொல்கத்தாவை சேர்ந்த ஜாபர் ரியாஸ் மற்றும் பீகாரை சேர்ந்த முகமது ஷம்ஷத் என தெரிய வந்தது. இவர்களில் ஜாபர், பாகிஸ்தானிய பெண்ணான ரபியாவை கடந்த 2005ம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜாபர், ஷம்ஷத் இருவரும் ராணுவ கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் பிற கட்டிடங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோவாக பதிவு செய்த விவரங்களை விசாரணையில் ஒப்பு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: